புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த திருவரங்குளம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியையாகப் பணிபுரிந்து வந்தவர் சரஸ்வதி. அதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தவர் மீனலோசனி என்கிற மீனாட்சி. இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
கடந்த 15 நாட்களுக்கு முன் ஆசிரியைகள் இருவருக்கும் பையை ஓரிடத்தில் வைப்பது குறித்து தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, இரு ஆசிரியைகளும் பள்ளி என்பதையும் மறந்து சண்டை போட்டுள்ளனர். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் முத்துக்குமரன் மூலம், கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.
அதன்படி பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட இரு ஆசிரியைகளையும் பணியிட மாறுதல் செய்து கல்வித்துறை உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவ, மாணவிகள் கடந்த திங்கட்கிழமை வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புறக்கணிப்பு போராட்டம் நடத்திய மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியை மீனாட்சியை மீண்டும் திருவரங்குளம் பள்ளிக்கே கொண்டு வரவேண்டும் என்றும், ஒருதலைபட்சமாக நடந்து கொள்ளும் பள்ளி தலைமையாசிரியர் முத்துக்குமரனை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் தலைமை ஆசிரியர் முத்துக்குமரன் பேச்சுவார்த்தை நடத்தி வகுப்புக்கு செல்ல அறிவுறுத்தினார். ஆனால் மாணவர்கள் அவர் பேச்சை கேட்கவில்லை. பின் கணேஷ் நகர் போலீஸ் ஸ்டேஷன் போலீஸார் வந்து மாணவர்களை சமாதானப்படுத்தி புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட வைத்தனர். அரைமணி நேரம் இந்த போராட்டம் நடந்தது. தகவலறிந்த ஆலங்குடி தாசில்தார் கோவிந்தராஜன் உட்பட, மாவட்ட கல்வி அலுவலர்களும் வந்து, சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் முத்துக்குமரன் கூறியதாவது: "ஆசிரியைகள் இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவத்தன்று ஆசிரியை சரஸ்வதி உடற்கல்வி ஆசிரியை மீனாட்சியை அடித்து விட்டதாக கூறப்பட்டது. சம்பவம் குறித்து விசாரித்தபோது, நடந்தது என்னவென்று தெரியாது என்று மற்ற ஆசிரியைகள் கூறினார்கள். சிலர் அடிதடி நடக்கவில்லை என்றும் கூறினர்.
இருவரிடமும் சரியாகச் சொல்லச் சொல்லி கேட்டபோது, நடவடிக்கை எடுத்தால் இருவருக்கும் பாதிப்பு வரும் என்று கருதி ஆசிரியை சரஸ்வதி தவறை ஒப்புக்கொண்டு சமாதானமாக போவதாகச் சொல்லிவிட்டார். ஆனால் மீனாட்சி நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்று சொல்லி விட்டார். அவருடைய கணவரும் அதைத்தான் சொன்னார். ஆசிரியை மீனாட்சி எழுத்துப்பூர்வமான புகாரும் கொடுத்தார்.
அதனால் அந்த புகாரை உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றேன். அதன்படி உடற்கல்வி ஆசிரியை மீனாட்சி மணமேல்குடி பள்ளிக்கும், தமிழாசிரியை சரஸ்வதி மேலத்தானியம் பள்ளிக்கும், டெபுடேசன் முறையில் இடமாறுதல் செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.