Pages

Monday, October 21, 2013

பயிற்சியில் இருவேறு நிலைப்பாடு: ஆசிரியர்கள் பெரும் குழப்பம்

"ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியில், இருவேறு நிலைபாடு உள்ளதால், குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அவற்றை களைய விடுமுறை நாட்களில் பயிற்சி வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என, கோரிக்கை எழுந்துள்ளது.


தமிழகத்தில் 32 மாவட்டங்களில் 385 யூனியன்கள் உள்ளன. அவற்றில், 3,700க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி, 9,938க்கும் அதிகமான நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. அதில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வட்டார வளமையம் மூலம், இப்பயிற்சி வழங்கி வருகிறது.

தமிழகத்தில் 385 வட்டார வளமையங்கள் உள்ளன. அவற்றை நிர்வகிக்க மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் பணியாற்றுகின்றனர். மேலும், ஒவ்வொரு யூனியன்களிலும் குறைந்தது ஆறு குறுவள மையங்கள் செயல்படுகிறது. கடந்த 2002ம் ஆண்டு முதல் மாதந்தோறும் முதல் சனிக்கிழமை துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும், இரண்டாம் சனிக்கிழமை, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு வரை மாதத்துக்கு ஒரு நாள் என பத்து நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது. அந்த பத்து நாட்களும் பள்ளி வேலை நாட்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டது. தற்போது, மூன்று பருவத்துக்கும் தலா ஒரு பயிற்சி வீதம் மூன்று நாட்கள் மட்டுமே வழங்க அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவிட்டது.

மேலும், வட்டார வளமையம் மூலம் ஆண்டுக்கு 20 நாட்கள் வழங்கப்பட்டு வந்த பயிற்சியானது, வெறும் நான்கு நாட்களாக குறைக்கப்பட்டது. இப்பயிற்சியில், 40 சதவீதம் ஆசிரியர்கள் மட்டும் பங்கேற்கவும் 60 சதவீதம் ஆசிரியர்கள் பள்ளி நடத்தவும் உத்தரவிடப்பட்டது.

தற்போது, முதல் பருவத்துக்கு ஒரு குறுவளமைய பயிற்சியும், ஒரு வட்டார வளமையப் பயிற்சியும் வழங்கப்பட்டது. அந்த பயிற்சி நடந்த இரண்டு நாட்களும் 40 சதவீத ஆசிரியர்கள் பயிற்சியிலும் 60 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கும் சென்றனர். இந்நிலையில், குறுவளமையம் நடக்கும் மூன்று நாட்களையும், பள்ளி வேலை நாட்களாக அரசு அறிவித்துள்ளது.

ஆனால், வட்டார வள மையத்தில் வழங்கப்படும் பயிற்சி நாள், விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. மேலும், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு நடைபெறும் நாள் பள்ளி வேலை நாளாகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடைபெறும் நாள், பள்ளி விடுமுறை எனவும், கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது ஆசிரியரை குழப்பம் அடையச் செய்துள்ளது.

தற்போது, சனிக்கிழமை சமுதாய விழிப்புணர்வு மற்றும் பல்லூடக பயிற்சி வழங்கப்பட்டது. அதில், 40 சதவீத ஆசிரியர்கள் பயிற்சியிலும், 60 சதவீத ஆசிரியர்கள் விடுமுறையிலும் உள்ள சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு விடுமுறை நாளான சனிக்கிழமை பயிற்சி வழங்குவதை எஸ்.எஸ்.ஏ., மறுபரிசீலனை செய்து பள்ளி வேலைநாட்களில் இதுபோன்ற பயிற்சியை வழங்க வேண்டும்.

மேலும், விடுமுறை தினமாக சனிக்கிழமை அன்று பயிற்சியில் கலந்து கொள்ளும் 40 சதவீத ஆசிரியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க கல்வித்துறை ஆவண செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.