Pages

Monday, October 21, 2013

எதிர்காலத்திற்கான மகிழ்ச்சி மாணவப் பருவத்தில் தொடங்குகிறது

பள்ளி, கல்லூரியில் படித்த மாணவர்கள் பல வருடங்களுக்குப் பின் சந்திக்கும் நிகழ்வுகளை அடிக்கடி செய்தித்தாள்களில் படித்திருப்போம். கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அதிலும் குறிப்பாக முதுநிலை படிக்கும் மாணவர்களுக்கு தங்கள் பள்ளித் தோழர்களோடு மீண்டும் ஒன்றாகக் கூடும் நிகழ்வுகளை சந்தித்த அனுபவம் இருக்கும்.

மறுபடியும் ஒன்று கூடும் சம்பவங்கள் தற்பொழுது அதிகமாகி வந்துகொண்டிருப்பதற்கு முக்கிய காரணமாக தொழிநுட்பமும் இருக்கிறது. இணையதளங்களின் உறுதுணையால் தங்களது பழைய நண்பர்களைக் கண்டடைவது எளிதான ஒன்றாக மாறிவிட்டிருக்கிறது.

10 வருடங்கள், 20 வருடங்கள், 30 வருடங்கள் என முன்னாள் மாணவர்கள் தங்கள் குழந்தைகளுடன், பேரப்பிள்ளைகளுடன் சந்திக்கும் நிகழ்வுகளை படிப்பவர்களுக்கும் கூட, இந்நிகழ்வுகள் மனதிற்குள்ளாக உற்சாகத்தை  ஏற்படுத்துவதாக இருக்கிறது. இந்த மாதிரியான செய்திகளை படிப்பவர்கள் நினைவுகளை பின்னோக்கி செலுத்தி தங்கள் கல்லூரி, பள்ளி வாழ்க்கையின்  சம்பவங்களை எண்ணி பார்க்கின்றனர்.

இப்படிப்பட்ட சிந்தனைகளானது மாணவர் முதல் வயதான பெரியவர் வரை அனைவரையும் கடந்த காலத்திற்கு பாகுபாடின்றி அழைத்துச்செல்கிறது. கடந்து போன நிகழ்வுகள் எதிர்காலத்தில் தங்களின் செயல்பாடுகளை எப்படி மாற்றிக்கொள்வது என்பதற்கு அடிப்படையாக இருக்கிறது என்பதனாலும் இவை முக்கியத்துவம் பெறுகிறது.

வயதான காலத்தில் இளமை காலத்திய நினைவுகளே மகிழ்ச்சி தரும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. எதிர்காலத்திற்கான மகிழ்ச்சியான அஸ்திவாரம் பள்ளி, கல்லூரி வாழ்க்கையில் தான் இடப்படுகிறது. தேர்ந்தெடுக்கும் பாடங்கள், அமைத்துக் கொண்ட நண்பர்கள், படிக்கும் கல்வி நிலையம் போன்றவற்றோடு தொடர்புடைய ஏதேனும் ஒன்று வாழ்க்கையின் இறுதி காலம் வரை ஏதோ ஒரு விதத்தில் நம்மோடு நடைபோடுகிறது.

இப்படிப்பட்ட அருமையான வாழ்க்கையை  நமது எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக மாற்ற வேண்டும் அல்லவா? வெற்றிகரமான மனிதனாக எதிர்காலத்தில் நண்பர்களை சந்திக்க இப்பொழுதே தயாராக வேண்டும். அதற்காக பள்ளியில், கல்லூரியில் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்திருக்கின்றோமா? பெற்றோரின் அறிவுரைகளை மதிக்கிறோமா? கிடைக்கும் நேரங்களை வளர்ச்சிக்காக செலவழிக்கிறோமா? சமுதாயத்திற்கு ஏதேனும் நன்மைகள் செய்திருக்கிறோமா?

மேற்கண்ட கேள்விகளுடன் நம்மை நாம் ஆய்வுக்கு உட்படுத்தினால் விடைகள் சற்று மோசமாக கூட இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைப்போம் என்றால் இன்றைக்கு மட்டுமல்ல என்றுமே நமது எண்ணம் பிறகு என்பதாகத்தான் இருக்க முடியும்.

தருணங்களை தவற விடாமல் நன்மை தரும் நிகழ்வுகளாக, எதிர்காலத்திற்கு வளர்ச்சி தரும் செயல்பாடுகளாக உருவாக்கி மாணவப் பருவத்தில் மகிழ்ச்சிகரமாக நடைபோடுவோம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.