Pages

Monday, October 21, 2013

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ரூ.41 கோடி அரசு ஒதுக்கீடு

ஆறு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு, 2012-13, 13-14ம் கல்வி ஆண்டுக்கு, ரூ.41 கோடியை சிறப்பு கட்டணமாக (ஸ்பெஷல் பீஸ்) அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்பட்டு வந்தது. இதன் மூலம், பள்ளிகளுக்கு தேவையான தளவாட பொருட்கள், அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வந்தன.

அனைவருக்கும் இலவச கல்வி அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மாணவர்களிடம் வசூலிக்கப்பட்டு வந்த சிறப்பு கட்டணம் (ஸ்பெஷல் பீஸ்) கடந்த 2008-09 ம் கல்வி ஆண்டில் ரத்து செய்யப்பட்டது. இதற்கான, இழப்பீட்டு தொகையை அரசே ஈடு செய்யும் என கூறியது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்து வந்தது.

கடந்த 2011-12ம் ஆண்டு, ரூ.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2012-13ம் ஆண்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால், பள்ளிகளில் சாதாரண அடிப்படை வசதிகள் கூட மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. பல பள்ளிகளில் நிதி கையிருப்பு என்பதே இல்லை. தலைமை ஆசிரியர்கள் தங்கள் கையிலுள்ள பணத்தை செலவழித்து வந்தனர். இந்த நிதியை ஒதுக்கித்தருமாறு, அவர்கள் அரசுக்கு பல்வேறு கட்டங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், இதற்காக அரசு 2012-13, 2013-14ம் ஆண்டுக்கு ஆண்டுக்கு தலா ரூ.20 கோடியே 50 லட்சம் வீதம், 41 கோடி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி நிறுவன பள்ளிகளுக்கு இந்த இழப்பீட்டு தொகை வழங்கப்படாது, என அரசு முதன்மை செயலர் சபீதா, முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியுள்ளார்.

தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: சிறப்பு கட்டணம் இரண்டு ஆண்டாக ஒதுக்கப்படாததால் அடிப்படை பணிகளை நிறைவேற்ற தலைமை ஆசிரியர்கள் தன்னுடைய சொந்த பணத்தை செலவழித்து வந்தனர்.

ஒரு சில பள்ளிகளில், பணமின்மையால், அடிப்படை பணிகளில், முட்டுக்கட்டை ஏற்பட்டது. இவற்றை மொத்தமாக ஒதுக்கீடு செய்யாமல், அந்தந்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில், வரும் காலங்களில் ஒதுக்கீடு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.