Pages

Monday, October 28, 2013

25 பேருக்கு "லட்சிய ஆசிரியர் - 2013" விருது

"ஆசிரியர் தினம்" முன்னிட்டு, "தினமலர்" நாளிதழ் சார்பில் நடத்தப்பட்ட, "நான் ஒரு லட்சிய ஆசிரியர்" கட்டுரைப் போட்டியில் தேர்வு பெற்ற, 25 ஆசிரியர்களுக்கு, "லட்சிய ஆசிரியர் -2013" விருது, கோவையில் நேற்று வழங்கப்பட்டது.

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள், மிகுந்த ஆர்வமுடன் கட்டுரைகளை அனுப்பியிருந்தனர். அவற்றில், 25 சிறந்த கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு, பரிசளிப்பு விழா, கோவை, காந்திபுரம், ராம்நகரிலுள்ள ஓட்டலில் நேற்று நடந்தது.

கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி, சிறந்த கட்டுரையாளர்களுக்கு விருது, சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசியதாவது: அனைவரிடமும் திறமை உண்டு. அந்த திறமைக்கு அங்கீகாரம் கிடைத்தால் மட்டுமே, அதனை மேம்படுத்த முடியும். பாராட்டு, குழந்தைகள் முதல் அனைவரையும் மகிழ்விக்கிறது. ஆசிரியர்களின் திறமைகளை கண்டறிந்து பாராட்டும் "தினமலர்" நாளிதழுக்கு நன்றி.

துறைகள் எதுவாக இருந்தாலும், குறைகளை சுட்டிக்காட்டும் "தினமலர்" நாளிதழின் நோக்கம் வரவேற்கத்தக்கது. மாணவர்களின் உணர்வுகளை புரிந்து, அவர்களின் மனதைத் தொடும் விதத்தில், ஆசிரியர்களின் செயல்பாடு அமையவேண்டும். பிற பணிகளை போன்றதல்ல, ஆசிரியர் பணி. மனதளவில் ஒன்றுதலோடு பணியாற்றினால் மட்டுமே, சிறப்பாக செய்ய முடியும்.

அழகிய சிற்பங்களை உயிரோட்டத்துடன் எதிர்கால சமூகத்திற்கு கொடுக்கவேண்டியது, ஆசிரியர்களின் தலையாய கடமை. அதை உணர்ந்து சிறப்பாக பணிபுரிய வேண்டும். இவ்வாறு, ஞானகவுரி பேசினார். "லட்சிய ஆசிரியர் - 2013" விருது பெற்ற ஆசிரியர்கள் கூறுகையில், "இன்றைய தினம், எங்களது வாழ்நாளில் மறக்க முடியாத, இனிமையான நாள். முழு ஈடுபாட்டுடன் பணியாற்றிய எங்களைப்போன்ற ஆசிரியர்களை கவுரவித்ததன் மூலமாக, தினமலர் நாளிதழ், ஆசிரியர்களின் கல்விச்சேவைக்கு பக்க பலமாக நிற்கிறது" என்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.