சின்னமனூரில் பள்ளிகள், கோயில் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையால், பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. கடையை உடனடியாக இடம்மாற்ற பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அனுப்பியுள்ளனர்.
சின்னமனூரில் முத்தாலம்மன் கோயில் பகுதி, பொன்னகர் பகுதி இணையும் இடம் திருவள்ளுவர் பள்ளி தெருவில் வருகிறது. இப்பகுதியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் நெடுஞ்சாலையிலிருந்து மாற்றப்பட்ட டாஸ்மாக் கடை ஒன்று புதிதாக திறக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்மாக் கடையால் இப்பகுதியில் பல்வேறு இடையூறுகளும், பிரச்னைகளும் ஏற்பட்டு வருகிறது.
நான்கு வீதிகளுக்கு இணைப்பு தெருவாக உள்ள இப்பகுதியில் 2 கோயில்கள், 4 பள்ளிகள், ஒரு ஐ.டி.ஐ., பெண்கள் கழிப்பறை, மாணவிகளுக்கான விடுதி உள்ளிட்டவைகள் இக்கடையின் அருகருகே அமைந்துள்ளன. இதுதவிர அரசு மருத்துவமனை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மெயின்ரோடு உள்ளிட்டவைகளுக்கு இந்த பகுதி வழியாகத்தான் செல்ல வேண்டும்.
இதனால் தினந்தோறும் எந்த நேரத்திலும் பெண்களும், மாணவ மாணவிகளும், அரசு அலுவலர்களும், பொதுமக்களும் இந்த தெருவின் வழியாக சென்று வருகின்றனர். இந்நிலையில், இந்த தெருவில் புதிதாக டாஸ்மாக் கடையை திறந்திருப்பதால், பெண்களும் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எப்போதும் இந்த தெருவில் குடிமகன்களின் தொல்லையை மக்கள் சந்திக்கின்றனர். தெருவில் குடிகன்கள் செய்யும் ரகளையால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. தவிர, அனைத்து சமுதாயத்தினரும் இங்கு வசிப்பதால், சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதுகுறித்து இப்பகுதி மக்கள், மனித உரிமை கழகத்தில் புகார் செய்தனர். இந்த அமைப்பின் நிர்வாகிகள், இக்கடையை உடனடியாக இடமாற்றம் செய்ய அரசிற்கும், அதிகாரிகளுக்கும் மனுக்களை அனுப்பியுள்ளனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.