தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுகின்றனர். தேர்வு எழுதும் பார்வையற்றவர்களுக்கு கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்கீடு செய்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு கீழ் தளத்தில் தேர்வு எழுதவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு நாளை (17ஆம் தேதி) மற்றும் நாளை மறு நாள் (18ஆம் தேதி) நடக்கிறது. இதில் முதல் தாள் எனப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு நாளையும், இரண்டாம் தாள் எனப்படும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு நாளை மறுநாள் நடக்கிறது.தமிழகம் மற்றும் புதுவையில் 2 லட்சத்து 71 ஆயிரத்து 909 இடைநிலை ஆசிரியர்கள் முதல் தாளை எழுதுகின்றனர். அதுபோல் 4 லட்சத்து 18 ஆயிரத்து 308 பட்டதாரி ஆசிரியர்கள் இரண்டாள் தாளை எழுதுகின்றனர். மொத்தத்தில் தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 6 லட்சத்து 90 ஆயிரத்து217 பேர் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதுகின்றனர்.இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆசிரியர் தகுதி தேர்வை கண்காணிக்க மாவட்ட கலெக்டர்களை தலைவராக கொண்ட சிறப்புகண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையை சேர்ந்த 32 இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் அடங்கியகுழுவினர் தேர்வை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை நடத்தும் பணியில் 29 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை பணியாளர்களும்,பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை நடத்தும் பணியில் 42 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை பணியாளர்கள் களம் இறக்கி விடப்பட்டுள்ளனர்.ஆசிரியர் தகுதி தேர்வை 20 ஆயிரத்துக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகளும், 2 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையற்றவர்களும் எழுதுகின்றனர். மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக அவர்களுக்கு கீழ் தளத்தில் அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுபோல் பார்வையற்றவர்களுக்கு அவர்களுக்கு பதிலாக தேர்வு எழுத மாற்றுநபர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். பார்வையற்றவர்கள் மட்டும் தேர்வு எழுதுவதற்கு கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1,170 தேர்வு மையங்களில் தகுதி தேர்வு நடக்கிறது" எனக் கூறப்பட்டுள்ளது.
நன்றி: விகடன்
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.