Pages

Friday, August 16, 2013

ஆசிரியர் மீதான பாலியல் புகார்: அதிகாரி குழு விசாரிக்க கோரிக்கை

"ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்களை, இணை இயக்குனர் தலைமையிலான குழு விசாரணை நடத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

சங்கத்தின் பொதுக் குழு கூட்டம், அதன் தலைவர் தியாகராஜன் தலைமையில், சென்னையில் நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:ஆசிரியர்களின் எதிர்கால வாழ்க்கையை கேள்விக் குறியாக்கும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை, மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அளவை, மற்ற மாநிலங்களில் உள்ளது போல், குறைக்க வேண்டும்.

எம்.பில்., பட்டம் பெற்ற, பட்டதாரி ஆசிரியர் அனைவருக்கும், அவர்கள் எம்.பில்., கல்வித்தகுதி பெற்ற நாள்முதல் ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். சமீப காலமாக, ஆசிரியர்கள் மீது, அதிகளவில், பாலியல் புகார்கள் கூறப்படுகின்றன. உண்மையில், ஆசிரியர்களுக்குள் நடக்கும் பிரச்னைகள் தான், அதிகளவில், பாலியல் புகார்களாக தவறாக கூறப்படுகின்றன.

ஒரு ஆசிரியர், மற்றொரு ஆசிரியரை பழிவாங்க, அரசாணையை தவறாக பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற புகார்களை, இணை இயக்குனர் தலைமையிலான ஒரு குழு, விசாரிக்க வேண்டும். புகாரில் உண்மை இருந்தால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கலாம். தவறான புகார் என்றால், அதன் பின்னணியில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது, கல்வித்துறை, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.