Pages

Wednesday, August 21, 2013

வேந்தர் நியமனத்தை ரத்து செய்ய வழக்கு: ஐகோர்ட் நோட்டீஸ்

திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலை வேந்தர் நியமனத்தை ரத்து செய்ய கோரிய வழக்கில், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

காந்திகிராம கிராமிய பல்கலை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சங்க செயலாளர் ராஜேந்திரன் தாக்கல் செய்த பொது நல மனு:

திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலை சங்கங்களின் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. பின், நிகர்நிலை பல்கலை அந்தஸ்தை பெற்றது. இதன் அமைப்பு விதிகளில் (எம்.ஓ.ஏ.,) திருத்தம் செய்ய வேண்டுமானால், பல்கலை செனட் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதற்கு பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,), வேந்தர் ஒப்புதல் பெறவேண்டும். இறுதியில் சங்கங்களின் பதிவாளர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

துணை ஜனாதிபதியின் (பல்கலை வேந்தர்) செயலகத்திலிருந்து வந்த கடித அடிப்படையில், அமைப்பு விதிகளில் திருத்தம் செய்ய 2011 ல் செனட் கூட்டம் நடந்தது. இதன் தீர்மானத்தின்படி விதிகள் திருத்தத்திற்கு சங்கங்களின் மாவட்ட பதிவாளர் ஒப்புதல் அளித்தார். இது சட்டத்தை மீறிய செயல்.

பல்கலை வேந்தராக ரெனானா ஜாப்வாலாவை நியமித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் உயர்கல்வித்துறை இணைச் செயலாளர் 2012 மார்ச் 30 ல் உத்தரவிட்டார். விதிகள்படி, பல்கலை செனட்தான் வேந்தரை தேர்வு செய்யும் அதிகாரம் பெற்ற அமைப்பு.

அமைப்பு விதிகள் திருத்தத்திற்கு, இதுவரை மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. மத்திய அரசின் உயர்கல்வித்துறை இணைச் செயலாளர், தன் அதிகாரத்தை மீறி செயல்பட்டுள்ளார். அவரது உத்தரவை ரத்து செய்து, ரெனானா ஜாப்வாலா வேந்தராக செயல்பட தடை விதிக்க வேண்டும், என குறிப்பிட்டார்.

நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், பி.தேவதாஸ் பெஞ்ச் முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் லஜபதிராய் ஆஜரானார். மத்திய உயர் கல்வித்துறை இணைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.