Pages

Thursday, July 4, 2013

நிதிப் பற்றாக்குறை: முடங்கும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம்

போதிய நிதி இல்லாததால், கல்லூரிகளில், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் செயல்படுவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.
 
மாணவர்களிடம் உதவும் எண்ணத்தை வளர்க்க, கல்லூரிகளில், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் செயல்படுகிறது. தமிழகத்தில், பாலிடெக்னிக், கலை அறிவியல், கல்வியியல், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட, 2,285 கல்லூரிகளில், இந்த சங்கம் செயல்படுகிறது. 12.50 லட்சம் மாணவர் உறுப்பினராக உள்ளனர்.

இதில், உறுப்பினராக பதிவு கட்டணம், 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இத்தொகை மூலம், ஒவ்வொரு கல்லூரியிலும், சங்கத்தின் திட்ட அலுவலர்கள், மாணவரை ஒருங்கிணைத்து, ரத்த தான முகாம், முதலுதவி பயிற்சி, பேரிடர் மேலாண்மை பயிற்சி உள்ளிட்ட, வகுப்புகளை நடத்துகின்றனர்.

மாணவர் வழங்கும் தொகையில், 40 சதவீதம், செஞ்சிலுவை சங்கத்திற்கு செல்கிறது; மீதியுள்ள, 60 சதவீதம், ஒவ்வொரு கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவை சங்க கணக்கிலும் வரவு வைக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில், 20 சதவீத கல்லூரிகளில் மட்டுமே, இச்சங்கத்திற்கு தனி வங்கி கணக்கு உள்ளது.

80 சதவீத கல்லூரிகளிலும், கல்லூரி நிர்வாக கணக்கிலேயே, இத்தொகை இருப்பு வைக்கப்படுகிறது. இதனால், ஒவ்வொரு பயிற்சி முகாமிற்கும், திட்ட அலுவலர் கடிதம் எழுதி, இத்தொகையை வாங்க வேண்டும். சில கல்லூரிகளில், பயிற்சி வகுப்பு நடத்த, பணம் தருவதில்லை என கூறப்படுகிறது. பல கல்லூரிகளில், இத்தொகையை தங்களின் சொந்த செலவுகளுக்கு பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

இந்த சங்கத்துக்கு, மத்திய, மாநில அரசுகள் தனியாக நிதியுதவி வழங்குவதில்லை. குறைந்த நிதியை கொண்டு, பயிற்சி வகுப்பு நடத்த இயலாததால், பல கல்லூரிகளில் சங்க செயல்பாடு முடங்கியுள்ளது. இதுகுறித்து, செஞ்சிலுவை சங்க அதிகாரி கூறியதாவது:

மாணவர் அளிக்கும் நிதியை கொண்டு, சங்கத்தை செயல்படுத்த முடியவில்லை. எனவே, உறுப்பினர் கட்டணத்தை, 20 ரூபாயாக உயர்த்த வேண்டும். சங்கத்தில் பயிற்சி பெறும் மாணவருக்கு, அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். மாணவர் நலன் கருதி, மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.