Pages

Thursday, July 4, 2013

தேசிய இளைஞர் விருது: விண்ணப்பம் வரவேற்பு

சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான பணிகளை சிறப்பாக செய்து வரும் இளைஞர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கலெக்டர் ராஜேஷ் வெளியிட்ட அறிக்கை: ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி, 12ம் தேதி சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி, தேசிய இளைஞர் விழாவில், மத்திய அரசால் சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான பணிகளை சிறப்பாக செய்து வரும் இளைஞர்களுக்கும் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் தேசிய இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த, 2012 ஏப்ரல் 1ம் தேதி முதல், 2013 மார்ச் 31ம் தேதி வரை செய்த இளைஞர் நலப்பணிகளுக்காக விருதுகள் இந்த நிதியாண்டில் வழங்கப்படுகிறது. தனிநபர் பிரிவில் தேர்வு செய்யப்படும், 25 நபர்களுக்கு 20 ஆயிரம் ரொக்கம் மற்றும் பதக்கம் வழங்கப்படும்.

இதற்காக விண்ணப்பிக்கும் தனி நபர்கள் குறிப்பிட்டுள்ள நிதியாண்டில், 13 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.தன்னார்வ அடிப்படையில் நிதி ஆதாயம் பெறப்படாமல் தொண்டு செய்திருக்க வேண்டும்.

இதற்கு முன் விருது பெற்றவர்களும், மத்திய, மாநில அரசு, பல்கலைக் கழகங்கள் மற்றும் இதர அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இந்த விருதினை பெற விண்ணப்பிக்க முடியாது. தன்னார்வ தொண்டு நிறுனம் பிரிவில் தேர்வு செய்யப்படுவோருக்கு, ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் வழங்கப்படும்.

இதற்காக விண்ணப்பிக்கும் தொண்டு நிறுனங்கள், சங்க பதிவு சட்டத்தின்படி தொண்டு நிறுவனம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.நிர்வாக குழுவின் அதிகாரங்கள் அமைப்பு விதிகளில் குறிப்பிட்டிருக்க வேண்டும். எவ்வித லாப நோக்கத்துடனும் தொண்டு பணிகள் ஆற்றியிருக்க கூடாது.

குறிப்பிட்ட ஜாதி, சமய அடிப்படையில் தொண்டாற்றிய நிறுவனங்களும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. சமுதாய நலப்பணிகளில் ஈடுபட்டு தொண்டாற்றிய ஃபோட்டோக்கள் மற்றும் செய்திக் குறிப்பு மற்றும் இதர ஆவணங்களுடன் சான்றொப்பம் இட்ட ஆதாரங்கள் இணைக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து மூன்று நகல்களுடன் வரும், 31ம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.

தகுதியான விண்ணப்பங்கள் கலெக்டர் தலைமையிலான குழு பரிசீலித்து மாநில அளவிலான குழுவுக்கு பரிந்துரைக்கும். மாநில குழு பரிசீலித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கும். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தகுதியான தனி நபர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பித்து விருதினை பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.