Pages

Friday, May 31, 2013

எழுத்தறிவு திட்டத்தில் தமிழகம் முதலிடம்: முதல்வருக்கு பாராட்டு

"கற்கும் பாரதம்" எழுத்தறிவு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில், தமிழகம், தேசிய அளவில் முதலிடத்தை பெற்றுள்ளது. இதற்கு பாராட்டு தெரிவித்து, தமிழக முதல்வருக்கு, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
நாட்டில், 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறுபான்மையினர், நலிவுற்றோர், குறிப்பாக பெண்கள் எழுத்தறிவு பெற, 2009ம் ஆண்டில், "சக்ஷார் பாரத்" என்ற பெயரில், வயது வந்தோருக்கான எழுத்தறிவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது.

மாவட்டங்கள் தேர்வு இத்திட்டம், மாநில அரசுகளால் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில், இத்திட்டம் "கற்கும் பாரதம்" என்ற பெயரில் செயல்படுத்தப்படுகிறது. 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 50 சதவீதத்திற்கும் குறைவாக பெண்கள் எழுத்தறிவு உள்ள, விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், சேலம், தருமபுரி, ஈரோடு, ஆகிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டது.

இம்மாவட்டங்களில், 17.46 லட்சம் பேர் எழுத்தறிவு இல்லாதவர்களாக, அடையாளம் காணப்பட்டனர். அவர்களை, எழுத்தறிவு பெற்றவர்களாக மாற்ற, 3,152 மையங்களில்,பாடங்கள் நடத்தப்படுகின்றன.

2011ம் ஆண்டு மார்ச் மாதம் முடிவில், இத்திட்டத்தின் மூலம், 2 லட்சத்து 67 ஆயிரத்து 555 கல்லாதோர் மட்டும் கற்றோராக மாற்றப்பட்டனர். தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பிறகு, மரபு வழி கற்பித்தல் முறையோடு இணைந்து கற்பிக்கப்படும், 40 மாதிரி வயது வந்தோர் கல்வி மையங்களை அமைக்க உத்தரவிட்டார்.

இங்கு, கணினி மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது. இத்திட்டத்தில், பெண்களை அதிக எண்ணிக்கையில் சேர்க்க, பல தொழிற்பயிற்சிகள் இணைந்து அளிக்கப்பட்டன. மகளிர் சுய உதவி குழுக்களில், 100 சதவீதம் எழுத்தறிவு பெற்றவர்கள் என்ற இலக்கை அடைய, 30 ஊராட்சி கூட்டமைப்புகளுக்கு, 50 ஆயிரம் ரூபாய், சிறப்பு ஊக்கத் தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டார்.

இதனால், "கற்கும் பாரதம்" திட்டத்தின் கீழ், 17.26 லட்சம் கல்லாதோர், கற்றோராக மாற்றப்பட்டுள்ளனர். இத்திட்டத்தின் இலக்கை எய்திய, ஒரே மாநிலம் என்ற பெருமை, தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.

இச்சாதனையைப் பாராட்டி, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சசி தரூர், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.