Pages

Monday, March 18, 2013

குழந்தைகள் பிறப்பு வீதம் குறைந்ததால் கேரளாவில் பள்ளிகள் மூடப்படும் அபாயம்

கடந்த சில ஆண்டுகளாக, கேரளாவில், குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், போதுமான குழந்தைகள் இல்லாமல், பல பள்ளிகள் மூடப்படும் நிலைமை உருவாகி உள்ளது.கேரள மாநில திட்ட வாரியம் சார்பில், ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வு அறிக்கையில், கூறப்பட்டு உள்ளதாவது:கேரளாவில், கடந்த பல ஆண்டுகளாக, குடும்பக் கட்டுப்பாடுத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. நாட்டிலேயே, கேரளாவில்தான், கடந்த, 10 ஆண்டுகளில், மக்கள் தொகை வளர்ச்சி வீதம், மிகக் குறைவாக, 4.9 சதவீதம் என்ற அளவில் உள்ளது. மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில், 10 சதவீதத்தினரே, ஆறு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள்.இங்கு, சில ஆண்டுகளாக, குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து விட்டதால், போதுமான மாணவர்கள் இல்லாமல், பல பள்ளிகள் செயல்பட முடியாத நிலை உருவாகியுள்ளது. 2011-12ம் கல்வியாண்டில், இப்படி செயல்படமுடியாத பள்ளிகளின் எண்ணிக்கை, 4,641. இது, அதற்கு முந்தைய ஆண்டை விட, 334 அதிகம். இவற்றில், 70 சதவீதம் பள்ளிகள், ஆரம்ப பள்ளிகள்.போதிய மாணவர்கள் இல்லாமல், பொருளாதார ரீதியாகச் செயல்பட முடியாத நிலையில் உள்ள பள்ளிகளில், 2,271 அரசு பள்ளிகள். மீதமுள்ளவை அரசு உதவி பெறும் பள்ளிகள். இந்தப் பள்ளிகளில், 685 பள்ளிகள், கண்ணூர் மாவட்டத்தில் உள்ளன.கேரளாவில், ஆரம்ப கல்வியில், 2012-13ம் கல்வியாண்டில், சேர்ந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 39.86 லட்சம். இது அதற்கு முந்தைய ஆண்டை விட, 6 சதவீதம் குறைவு. பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதை அடுத்து, ஆசிரியர்களின் வேலை வாய்ப்பு பறிபோகும் நிலை உருவாகியுள்ளது. ஆனால், "எந்த விதமான ஆட்குறைப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது' என, ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.இவ்வாறு, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.