Pages

Sunday, March 17, 2013

நாகர்கோவில் ரயில்வே பிளாட்பாரத்தில் சிதறிய விடைத்தாள்கள் - நாளிதழ் செய்தி

நாகர்கோவில் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் பிளஸ் 2 விடைத்தாள் சிதறிய சம்பவம் தொடர்பாக மாணவர்கள் பாதிக்காத வகையில் வீடியோ காட்சிகள் மூலம் துல்லியமாக ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாகர்கோவில் ரயில் வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் கடந்த 5ம் தேதி அதிகாலை பிளஸ் 2 விடைத்தாள்கள் சிதறிக்கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாகர்கோவிலில் விடைத்தாள் திருத்தும் பணிக்காக கொண்டுவரப்பட்ட தமிழ் 2ம் தாள் பேப்பர் பண்டல் கிழிந்தபோது விடைத்தாள்கள் கீழே விழுந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விடைத்தாள்களை கைப்பற்றி நாகர்கோவிலில் விடைத்தாள் திருத்தும் மையத்தில் வைத்துள்ளனர்.

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன், மற்றும் தபால்துறை, ரயில்வே பார்சல் சர்வீஸ் அதிகாரிகளும் மையத்திற்கு நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டனர். கல்வி ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்க சம்பந்தப்பட்ட ரயில்வே பார்சல், மற்றும் போஸ்டல், கல்வித்துறை அதிகாரிகள் மறுத்து விட்டனர். சர்ச்சைக்குரிய விடைத்தாள்களை திருத்தும் விஷயத்தில் கல்வித்துறையினர் என்ன முடிவெடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதுகுறித்த செய்தி கடந்த 14ம் தேதி தினமலர் நாளிதழில் வெளியானது.

சேதமடைந்த பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து மாநில கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்; நாகர்கோவில் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் பார்சல் அவிழ்ந்து பிளஸ் 2 விடைத்தாள்கள் சிதறியதில் பேப்பர்கள் எதுவும் சேதமடையவில்லை. அனைத்து விடைத்தாள்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு திருத்தும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

உடனடியாக விடைத்தாள்களின் நிலவரம் குறித்த வீடியோ காட்சி கல்வித்துறை உயரதிகாரிகள் பார்வைக்கு வந்தது. இக்காட்சிகளின் ஆதாரங்கள் துல்லியமாக ஆய்வு செய்யப்பட்டன. இவற்றில் மாணவர்கள் பாதிக்கும் வகையில் எதுவுமில்லை. எதிர்பாராத விதமாக நிகழ்ந்த சம்பவத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாதுர்யமாக கையாண்டு சரிசெய்துள்ளனர். இதற்கான அறிக்கைகளும் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. எனவே பிளஸ் 2 மாணவர்களுக்கு பாதிப்பில்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நாகர்கோவிலுக்கு விடைத்தாள்கள் கொண்டுவந்ததில் அலட்சியப்போக்கு நிலவி வந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே தேர்வு வினா, மற்றும் விடைத்தாள்களை கையாள்வதில் மேலும் துல்லியமான நடவடிக்கையை கல்வித்துறை கையாள அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.