Pages

Wednesday, February 13, 2013

கல்வித்துறை அதிகாரிகளுக்குள் கருத்து மோதல்: மாணவர்கள் அவதி - நாளிதழ் செய்தி

ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டை யூனியன் துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், ஏ.இ.ஓ.,வுக்கும் பனிப்போர் வெடித்ததால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், மாவட்ட செயலாளர் சண்முகம், ஈரோடு கலெக்டர் சண்முகத்திடம் மனு அளித்தார். அம்மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது:

அம்மாப்பேட்டை யூனியனில் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், கல்வி பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று முதல் ஐந்தாம் வகுப்புக்கு, 500 ரூபாயும், ஆறாம் வகுப்புக்கு, ஆயிரம் ரூபாயும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் கல்வி உதவி தொகையாக வழங்கப்படுகிறது.

நடப்பாண்டுக்கான உதவித் தொகையை, இரண்டு மாதத்துக்கு முன்பே, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் செக்காக வழக்கப்பட்டுள்ளது. ஆனால், இரு மாதத்துக்கு மேலாகியும், இதுவரையில் வழங்காமல் அம்மாப்பேட்டை ஏ.இ.ஓ., பிரகதாம்பாள் இழுத்தடித்து வருகிறார்.

மாவட்டத்தில் உள்ள மற்ற யூனியன்களில் டிசம்பர் மாதமே கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. ஆனால், அம்மாப்பேட்டை யூனியனில் மட்டும் கல்வி உதவித்தொகை வழங்கப்படாமல் உள்ளதால், பெற்றோர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால், பெற்றோர்களுக்கும், தலைமை ஆசிரியருக்கும், அடிக்கடி பிரச்னை உருவாகிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை பெறும் விபரம் பள்ளிகளுக்கு உரிய காலத்தில் தகவல் தெரிவித்து, விண்ணப்பங்களை பெற்று முறையாக, ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஏ.இ.ஓ., பிரகதாம்பாள் சமர்ப்பிக்காததால், அம்மாணவிகளுக்கு உதவித்தொகை பெற இயலாத நிலை உள்ளது.

அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்தாமல், அலட்சிய போக்கோடு செயல்படும் ஏ.இ.ஓ., பிரகதாம்பாள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, அம்மாப்பேட்டை ஏ.இ.ஓ., பிரகதாம்பாள் கூறியதாவது: ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கு இன்னும் காசோலை வரவில்லை. எனது உடல் நிலை சரி இல்லாததால், 14 நாட்கள் விடுமுறையில் இருந்தேன். எம்.பி.சி., வகுப்பினருக்கு, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் சரோஜா பெயருக்கு செக்வந்துள்ளது.

கடந்தாண்டில், 1.40 லட்சம் ரூபாய்க்கு வந்த செக்கை, மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது. கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் கணக்கில் வந்துள்ள தொகையை நான் எடுக்க முடியாது.தலைமை ஆசிரியர் சண்முகம், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் சரோஜாவுக்கு ஆதரவாக செயல்படுகிறார்.

கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலரின் முத்திரையை, அனுமதியின்றி இவர்கள் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளேன்.

அம்மாபேட்டை யூனியன் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிக்கு திடீர் விசிட் செய்த போதெல்லாம், தலைமை ஆசிரியர் சண்முகம், பள்ளியில் இருந்ததில்லை. ஆசிரியர்கள், பணியாளர்களுக்கான வருகை பதிவில் குளறுபடிகள் செய்துள்ளனர். ஆசிரியர் பாலசுப்பிரமணியம் பள்ளிக்கே வருவதில்லை. அவரது வருகை பதிவேட்டில், நானே ஆப்சென்ட் போட்டுள்ளேன். என் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் தான், மனு கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.