Pages

Wednesday, February 13, 2013

அரசு பள்ளிகளில் அடிப்படை வசதி: கல்வியாளர்கள் கோரிக்கை - நாளிதழ் செய்தி

தமிழகத்தில் உள்ள, அனைத்து அரசு பள்ளிகளிலும், கட்டாய கல்வி சட்டத்தில் உள்ளபடி, அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்" என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த, 2009ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் மற்றும் 2011ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கல்வி சட்ட விதிகளை அமல்படுத்துவதை கண்காணித்து, மேம்படுத்துவதற்கான உத்திகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் நடந்தது. இதில் கல்வியாளர்கள் கூறியதாவது:

ராஜகோபால் - கல்வியாளர்: தமிழகத்தில், கல்வி உரிமை சட்டத்தின் படி, அனைத்தும் சட்டபூர்வமாக நடக்கிறதா என்பதை, அனைவரும் ஒன்று சேர்ந்து கண்காணிக்க வேண்டும். சட்டத்தின் படி, பள்ளிகளில் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறதா என்பதை அறிய தனிக்குழு அமைக்க வேண்டும்.

அவ்வாறு குழந்தை கல்வியின் மீது ஆர்வம் கொண்டிருப்பவர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டால், எந்தெந்த பள்ளிகளில் என்னென்ன அடிப்படை வசதிகள், பூர்த்தி செய்யப்படவில்லை என்பதை அறிய முடியும். அரசும், எந்தெந்த பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்பதை அறிந்து, வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

வசந்திதேவி - முன்னாள் துணைவேந்தர்: கிராமபுறங்களில், தனியார் பள்ளிகள் அதிகரிப்பதற்கு, சாதிப்பூசல்கள் அடிப்படை காரணம். சமீபத்தில், பரமக்குடி பகுதியில் ஆய்வு செய்த போது, அதிர்ச்சியான தகவல் கிடைத்தது.

அங்குள்ள பெற்றோர்கள், அரசுப் பள்ளிகள் அருகில் இருக்கும் போது, பல கி.மீ., தொலைவில் உள்ள தனியார் பள்ளிகளில், தங்கள் குழந்தைகளை சேர்ந்தனர்.அது குறித்து, அப்பகுதி மக்களிடம் கேட்ட போது, ஆதிதிராவிட மாணவர்களே அதிக அளவில், அரசுப் பள்ளிகளில் படிப்பதால், தங்கள் குழந்தைகள் அவர்களுடன் சேர கூடாது என்பதற்காக, தனியார் பள்ளிகளில் சேர்ப்பதாக தெரிவித்தனர். இதை அறிந்தவுடன், நான் மிகவும் மனவேதனை அடைந்தேன்.

நாராயணன் - ஆசிரியர், பாடம் இதழ்: தமிழகத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளில், அடிப்படை வசதிகள் இல்லாததாலும், காப்பாளர்கள் சரி வர செயல்படாததாலும், அங்கு சேரும் குழந்தைகள் மேலும், குற்றவாளிகளாக மாறுகின்றனர்.

குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில், பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதால், குழந்தைகளின் முன்னேற்றத்தில் அவர்களால் கவனம் செலுத்த முடியவில்லை.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.