Pages

Tuesday, January 8, 2013

அரசு கல்லூரி கணினி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் உயருமா?

அரசு கல்லூரிகளில் கம்ப்யூட்டர் பயிற்சி திட்ட கவுரவ விரிவுரையாளர்கள் ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும் என முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தில் உள்ள 57 அரசு கலை கல்லூரிகளில் கம்ப்யூட்டர் பாடப்பிரிவு இல்லாத மாணவிகள், கம்ப்யூட்டர் அறிவைப் பெற வேண்டும் என நல்ல நோக்கத்துடன் கம்ப்யூட்டர் பயிற்சி திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா 2005ல் துவங்கி வைத்தார். தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்த அடிப்படையில் 250 கவுரவ விரிவுரையாளர்கள் 4 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் நியமிக்கப்பட்டனர்.

காலப்போக்கில் மாணவிகளிடம் குறைந்த பட்ச கல்விக்கட்டணம் வசூலிக்கப்பட்டு சம்பளம் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் அரசு கல்லூரியில் படிப்பை முடித்த மாணவிகள், குறைந்த பட்ச கம்ப்யூட்டர் அறிவைப் பெற்றனர். இதனால் மேற்படிப்பிற்கும், வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை கிடைத்து, முதல்வரின் இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இத்திட்டத்தில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் 2005லிருந்து 4 ஆயிரம் ரூபாயைத் தான் சம்பளமாக பெற்று வருகின்றனர். அதிலும் 6 மாதங்களுக்கு மட்டுமே சம்பளம் உண்டு. ஆனால் ஆண்டு முழுவதும் பணிபுரிகின்றனர். பிற துறைகளில் நியமிக்கப்பட்ட கவுரவ விரிவுரையாளர்களின் சம்பளம் தற்போது 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.

கம்ப்யூட்டர் பயிற்சி திட்ட விரிவுரையாளர்களுக்கு உயர்த்தவில்லை. இத்திட்டத்தில் பணியாற்றும் விரிவுரையாளர்கள் உயர்கல்விக்கு செல்ல முடியவில்லை. பிற பணிகளுக்கு விண்ணப்பிக்கவும் முடியவில்லை. பணி அனுபவ சான்றிதழ் பெற முடியாத நிலையும் உள்ளது. பலர் திருமணம் முடித்து குழந்தைகளுடன் இருக்கின்றனர். பலர் வயது முதுமையால், வேறு பணிக்கு செல்ல முடியாமல் இப்பணியில் தொடர்கின்றனர். முதல்வர் கம்ப்யூட்டர் பயிற்சி திட்டத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 comment:

  1. கல்லூரியில் பணிபுரிபவர்களூக்கு குறைவான சம்பளம்.அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.