Pages

Tuesday, January 8, 2013

டில்லியில் துவக்க பள்ளி ஆசிரியர்களாக பல்கலை மாணவர்கள் நியமனம்

தெற்கு டில்லி பள்ளிகளில், டில்லி பல்கலைக்கழக இளநிலை மாணவர்கள், பாடம் எடுக்கின்றனர். இதற்காக அவர்களுக்கு, மாதம், 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில், டில்லி பல்கலைக்கழகமும் ஒன்று. இங்கு, இளநிலை பட்டப்படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு, படிப்புடன், எக்ஸ்ட்ரா கரிகுலர் எனப்படும், கூடுதல் திறன் அம்சங்கள் தான் அதிகம். தெற்கு டில்லி கார்ப்பரேஷன் பகுதியில், ஏராளமான துவக்க பள்ளிகளுக்கு, ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. அந்த பணியிடங்கள் காலியாக இருப்பதால், மாணவர்களுக்கு சரிவர பாடம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், நன்கு அனுபவம் வாய்ந்த, டில்லி பல்கலைக்கழக மாணவர்களை, பகுதி நேர ஆசிரியர்களாக, துவக்க பள்ளிகளில் நியமிக்க முடிவு செய்யப்பட்டது. ஏராளமான மாணவர்கள், தினமும், ஒன்றிரண்டு மணி நேரம், தங்களுக்கு அருகாமையில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று, பாடம் எடுக்கின்றனர். குறிப்பாக, பேச்சுக்கலை, ஆங்கில அறிவு, நடிப்பு திறமை, விளையாட்டு, ஓவியம் வரைதல் போன்ற பாடங்களை, பல்கலைக்கழக மாணவர்கள் எடுக்கின்றனர். இதற்காக, அவர்களுக்கு, மாதம், 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து, தெற்கு டில்லி கார்ப்பரேஷன் கல்வி கமிட்டி தலைவர், சதீஷ் உபாத்யாயா கூறியதாவது: எக்ஸ்ட்ரா கரிகுலர் நடவடிக்கைகளில், டில்லி பல்கலைக்கழக மாணவர்கள் அதிகமாக ஈடுபடுவதை அறிந்தோம். எங்கள் பள்ளிகளில் நிறைய ஆசிரியர் பணியிடம் காலியாக இருந்தது. அந்த இடங்களில், ஆசிரியர்களை நியமிக்க, அதிக சம்பளம் கொடுக்க வேண்டிய நிலை காணப்பட்டது. எங்கள் கோரிக்கையை மாணவர்கள் ஏற்று கொண்டனர். ஆர்வமாக அவர்கள் பாடம் நடத்துகின்றனர்; மாணவர்களும் ஆர்வமாக பாடம்கற்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.