Pages

Saturday, January 26, 2013

இணையத்தில் மாணவ, மாணவியர் விவரம் பதிய அவகாசம்

மாணவ, மாணவியரின் விவரங்களை, இணையதளத்தில் பதிவு செய்வதற்கான கால அவகாசம், 31ம் தேதியுடன் முடியும் நிலையில், மேலும் இரு வாரங்களுக்கு, அவகாசத்தை நீட்டிப்பு செய்ய, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என, அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் விவரங்களை உள்ளடக்கி, "கல்வி நிர்வாக தகவல் கட்டமைப்பை" உருவாக்க, கல்வித்துறை, நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த தகவல்களின் அடிப்படையில், பல திட்டங்களை செயல்படுத்த, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, அவர்களின் பெயர்கள், வகுப்பு, பிரிவு, தாய், தந்தை பெயர், வீட்டு முகவரி, தந்தையின் தொழில், குடும்ப வருவாய் என, பல விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்தப் பணி, கடந்த ஒரு வாரமாக, மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.

கல்வித்துறை வழங்கியுள்ள பிரத்யேக இணையதளத்தில் , விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என, பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கால அவகாசம், இம்மாதம், 31ம் தேதியுடன் முடியும் நிலையில், மின்வெட்டு பிரச்னை, மாவட்ட அதிகாரிகளிடம் இருந்து, தாமதமாக கடிதங்களை பெற்றது போன்ற காரணங்களால், தனியார் பள்ளிகளில், பணிகள் முடியாமல் உள்ளன.

சென்னை புறநகர்களில் உள்ள, பல தனியார் பள்ளிகளுக்கு, இரு தினங்களுக்கு முன் தான், தகவல் கிடைத்துள்ளது. 3,000, 4,000 பேர் பயிலும் பள்ளிகளில், தகவல்களை பூர்த்தி செய்ய, பல நாட்கள் தேவைப்படும் நிலை உள்ளது. இருக்கிற ஒரு சில நாட்களில், மாநிலம் முழுவதும் பணிகள் முடிவடையாத நிலை இருப்பதால், கால அவகாசத்தை, மேலும் நீட்டிப்பு செய்ய, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆரம்பத்திலேயே, இறுதியான தேதியை தெரிவித்தால், பணிகளை முடிக்காமல் இருந்துவிடுவர். இதனால், 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என, தெரிவித்தோம். ஆனால், பல பள்ளிகளில், பணிகள் முடியாமல் இருப்பது, எங்களின் கவனத்திற்கு வந்துள்ளது.

எனவே, பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை, பிப்ரவரி 15 வரை, நீட்டிப்பு செய்ய திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்த அறிவிப்பு, மாத கடைசியில், பள்ளிகளுக்கு தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.