Pages

Thursday, January 31, 2013

5 பள்ளிகளை மூட முடிவு: 10 பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி

பத்திற்கும் குறைவான மாணவர்களே உள்ளதால், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியத்தில், ஐந்து ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 10 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை ஆரம்பிக்கவும், கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
திருவாடானை ஒன்றியத்தில் 117 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் குழந்தைகளை சேர்ப்பதில், இப்பகுதி மக்களுக்கு ஆர்வம் இல்லை. இதனால் 10க்கும் மேற்பட்ட பள்ளிகளில், 10க்கும் குறைவான மாணவர்களே படித்து வருகின்றனர்.

கலியணி கிராமத்தில் குழந்தைகள் சேராததால் இங்குள்ள ஒன்றிய துவக்கப்பள்ளி, கடந்தாண்டு மூடப்பட்டது. பிள்ளையாரேந்தல் ஒன்றிய துவக்கப்பள்ளியில் 7, கீழ்க்குடியில் 2, காட்டியனேந்தலில் 4, கீழக்கோட்டையில் 2, கிளியூரில் ஒன்று என்ற எண்ணிக்கையில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளிகளையும் விரைவில் மூடவும், ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு இடமாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்து இப்பகுதி கிராம மக்கள் கூறியதாவது:

ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை அடிப்படை கல்வி அறிவு அவசியம் வேண்டும். இது, அரசு துவக்கப் பள்ளிகளில் முறையாக கிடைப்பதில்லை. எனவே, தனியார் பள்ளிகளை நாட வேண்டி உள்ளது, என்றனர்.

தொடக்கக் கல்வி அலுவலர் ஒருவர் கூறியதாவது: இலவச சீருடை, நோட்டு, புத்தகங்கள், பை இலவசமாக கொடுத்தும், குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதில்லை. விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தியும், ஆசிரியர்கள் முறையாக பாடம் நடத்தியும், பெற்றோர்களிடம் மாற்றம் ஏற்படவில்லை.

ஆகவே, குறைந்த மாணவர்களை உள்ள பள்ளிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. திருவாடானை, எஸ்.பி.பட்டினம், வெள்ளையபுரம், பெருவாக்கோட்டை, கல்லூர், மங்களக்குடி, தொண்டி கிழக்கு, பாசிபட்டினம், என்.மங்கலம் போன்ற ஒன்றிய துவக்கப் பள்ளிகளில், ஆங்கிலக் கல்வி முறை விரைவில் அமல்படுத்தப்படும்.

தனியார் பள்ளிகளுக்கு நிகராக, மாணவர்களை உருவாக்க, தீவிர முயற்சி எடுத்து வருகிறோம், என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.