Pages

Sunday, June 10, 2012

அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள் 1,737 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் (2012-13) அரசு எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை 1,653-லிருந்து 1,737-ஆக அதிகரிக்க உள்ளது.  1960-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இப்போதுள்ள 100 எம்.பி.பி.எஸ். இடங்களை 150-ஆகவும், 1965-ம் ஆண்டு தொடங்கப்பட்ட செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் இப்போதுள்ள 50 எம்.பி.பி.எஸ். இடங்களை 100-ஆகவும் அதிகரிக்க "எல்.ஓ.ஐ.' எனப்படும் முதல் கட்ட ஒப்புதலை இந்திய மருத்துவக் கவுன்சில் வழங்கியுள்ளது.
இந்த இரண்டு கல்லூரிகளின் கூடுதல் இடங்களுக்கு இறுதிக் கட்ட ஒப்புதலை ("லெட்டர் ஆஃப் பர்மிஷன்') இந்திய மருத்துவக் கவுன்சில் விரைவில் அளித்துவிடும் என்று சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.  மொத்தம் 2,045 எம்.பி.பி.எஸ். இடங்கள்: சென்னை கீழ்ப்பாக்கம், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக தலா 50 எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரிப்பதால், 17 அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை1,945-லிருந்து 2,045-ஆக உயரும்; இந்த இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் போக, தமிழக ஒதுக்கீட்டுக்கு 1,737 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைப்பது உறுதியாகியுள்ளது.  கட்-ஆஃப் மதிப்பெண் மேலும் குறையும்: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ். படிப்பில் சேர இந்த ஆண்டு 28,500 மாணவர்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளனர். இதனால் 1,737 அரசு எம்.பி.பி.எஸ். இடங்களிலும், 11 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் 839 எம்.பி.பி.எஸ். இடங்களிலும் சேர கடும் கட்-ஆஃப் மதிப்பெண் போட்டி உள்ளது.  எனினும் கீழ்ப்பாக்கம், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள் அதிகரிப்பதன் காரணமாக கட்-ஆஃப் மதிப்பெண் மேலும் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  அதாவது, கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்கள் காரணமாக 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பொதுப் பிரிவினருக்கு உரிய மொத்த எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை 512-லிருந்து 538-ஆக அதிகரிக்கும்; இதேபோன்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய மொத்த எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை 438-லிருந்து 460-ஆக அதிகரிக்கும். இதேபோன்று பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட (அருந்ததியர்) வகுப்பினர், பழங்குடி வகுப்பினருக்கு உரிய எம்.பி.பி.எஸ். இடங்களும் ஓரளவு அதிகரித்து கட்-ஆஃப் மதிப்பெண் குறையும்.  ரேங்க் பட்டியல் வெளியாகும்போது...எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளோருக்கு வரும் 20-ம் தேதி ரேண்டம் எண் (சம வாய்ப்பு எண்) வழங்கப்படுகிறது; வரும் 25-ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 5-ம் தேதி தொடங்குகிறது.  ரேங்க் பட்டியல் வெளியிடப்படும்போது, அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கையும், பொதுப் பிரிவினர்- பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்பட ஒவ்வொரு வகுப்பினருக்கும் இடம் கிடைப்பதற்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண்ணும் துல்லியமாகத் தெரிந்துவிடும் என்று மருத்துவக் கல்வியாளர்கள் தெரிவித்தனர்.  காத்திருக்கும் சிவகங்கை: சிவகங்கையில் 100 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்க அனுமதி கோரி மருத்துவமனையுடன்கூடிய மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டுள்ளது. இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) அதிகாரிகள் குழுவினர் கடந்த மாதம் ஆய்வை முடித்துள்ளனர்.  இந்தக் கல்லூரிக்கும் முதல் கட்ட அனுமதியை இந்திய மருத்துவக்கவுன்சில் (எம்.சி.ஐ.) வழங்கும் நிலையில், தமிழக ஒதுக்கீட்டுக்கு கூடுதலாக 85 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.