நாட்டின் கல்வித் தரம் உயர வேண்டும் என்றால் ஆசிரியர்களின் தரம் உயர வேண்டும் என கல்வியியல் பல்கலைக் கழக பதிவாளர் வீரமணி பேசினார்.
கடலூர் அடுத்த கே.என்.பேட்டையில் உள்ள பவானி கல்வியியல் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில் 95 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கிய தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் வீரமணி பேசியதாவது: சுதந்திரத்திற்கு பின் நம்நாடு உயர்கல்வியில் வளர்ந்துள்ளதை மறுக்க முடியாது. அதேவேளையில் மேலை நாடுகளை ஒப்பிட்டு பார்க்கையில், இந்தியாவில் 15 சதவீதத்தினர் மட்டுமே உயர்கல்வி பெற்றுள்ளனர்.
இதுற்கு காரணம் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறியதுபோல், நாட்டின் நிகர உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்காக செலவிடும் நாடுதான் கல்வியில் முன்னோடியாக இருக்கும். கல்விக்கான கோத்தாரி கமிஷனும் இதைத்தான் வலியுறுத்தியுள்ளது.
ஆனால் இந்தியாவில் நிகர உற்பத்தியில் 3.85 சதவீதம் மட்டுமே கல்விக்காக ஒதுக்கப்படுகிறது. உயர்கல்விக்கு 1.25 சதவீதம் மட்டுமே செலவிடப்படுகிறது. இது எப்போது 6 சதவீதமாக உயர்கின்றதோ அப்போது நாடு கல்வியில் வளர்ச்சி அடைய முடியும்.ஆசிரியர் போட்டி தேர்வில் 7 சதவீதத்தினரும், பேராசிரியர் போட்டி தேர்வில் 6.6 சதவீதத்தினர் மட்டுமே தேர்ச்சி பெறமுடிகிறது.
ஆசிரியர்களின் கல்வித்தரம் குறைந்துள்ளதே இதற்கு காரணம். ஒரு நாட்டின் முன்னேற்றம் ஆசிரியர்கள் கையில்தான் உள்ளது. எனவே ஆசிரியர்களாக தேர்ச்சி பெற்றுள்ள நீங்கள் உங்கள் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் மாணவர்களின் தரம் உயரும். இதன்மூலம் நாட்டின் கல்வி தரமும் உயரும். இவ்வாறு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் வீரமணி பேசினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.