Pages

Saturday, April 7, 2012

விலையில்லா மடிக்கணினிகளை விற்கும் மாணவர்கள்.

அன்னூர்: "இந்தியாவில், தமிழகத்தில் மட்டும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா லேப்-டாப் வழங்கப்படுகிறது,'' என, அமைச்சர் தாமோதரன் அன்னூரில் பேசினார்.
குப்பேபாளையம், ஜி.ஆர்.ஜி., பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழக அரசின் விலையில்லா லேப்-டாப் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. கல்லூரி தாளாளர் நந்தினி வரவேற்றார்.

மாவட்ட வருவாய் அலுவலர் கற்பகம் பேசுகையில்,"மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் திறன் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில், அரசு விலையில்லா கம்ப்யூட்டர் வழங்குகிறது. ஆனால், சில இடங்களில் இதை மாணவர்கள் விற்பதாக தகவல் வருகிறது. மாணவர்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள, கம்ப்யூட்டரை பயன்படுத்த வேண்டும்,'' என்றார்.
அவிநாசி எம்.எல்.ஏ., கருப்பசாமி பேசுகையில், "தமிழக அரசு இந்த ஆண்டு லேப்-டாப் வழங்க, ஆயிரத்து 500 கோடி ரூபாய், தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு 748 கோடி ரூபாய், ஆதிதிராவிடர் தங்கும் விடுதிகளுக்கு 76 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது,'' என்றார்.  எம்.எல்.ஏ., சேலஞ்சர் துரை, சேர்மன் கண்ணம்மாள் முன்னிலை வகித்தனர்.
கல்லூரியின் மூன்றாமாண்டு மாணவ, மாணவியர் 150 பேருக்கு, 20 லட்சத்து 10 ஆயிரத்து 650 ரூபாய் மதிப்பு "லேப்-டாப்'களை வழங்கி வேளாண்துறை அமைச்சர் தாமோதரன் பேசியதாவது: படிக்காதவர்களே இருக்கக்கூடாது, இடைநிற்றல் கூடாது. கல்வியில் தமிழகம் இந்தியாவில் முதன்மை பெற வேண்டும் என்ற நோக்கத்தில், முதல்வர் ஜெயலலிதா கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கிறார். பள்ளிகளில் இடைநிற்றல் ஏன் ஏற்படுகிறது என ஆய்வு செய்து, அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மாணவர்களுக்கு காலணி, நோட்டு, புத்தகம், பென்சில் பாக்ஸ், சிறப்பு ஊக்கத்தொகை, முட்டையுடன் சத்துணவு, சைக்கிள், லேப்-டாப் ஆகியவை வழங்கப்படுகிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லாமல் "லேப்-டாப்' வழங்கும் திட்டம் இல்லை. தமிழகத்தில் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. நடப்பு பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
சுதந்திரத்திற்கு பின் இந்த பட்ஜெட்டில்தான் கல்விக்கு இவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் இல்லாத அரசு துறையே இல்லை. கம்ப்யூட்டர் கல்வி மிக முக்கியம். எனவே தான் விலையில்லா "லேப்-டாப்' வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு கற்பதை தவிர வேறு நோக்கம் இருக்கக்கூடாது. இவ்வாறு, அமைச்சர் பேசினார்.
ஊராட்சி தலைவர் சாமிநாதன், மாவட்ட கவுன்சிலர்கள் அமுல் கந்தசாமி, சங்கீதா, ஒன்றிய துணை சேர்மன் பார்த்தீபன் உள்பட பலர் பங்கேற்றனர். தாசில்தார் வீரபுத்திரன் நன்றி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.