Pages

Sunday, April 1, 2012

புதுக்கோட்டை எம்.எல்.ஏ விபத்தில் பலி.

இலுப்பூர்: அன்னவாசல் அருகே இன்று காலை ரோட்டில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் புதுக்கோட்டை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ முத்துக்குமரன் பலியானார். கட்சிப் பிரமுகருக்கு அஞ்சலி செலுத்த சென்றவருக்கு இந்த சோகம் நேர்ந்தது.


கடந்த சட்டசபை தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எஸ்.பி.முத்துக்குமரன் (43). இவரது சொந்த ஊர் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே குடும்பத்துடன் வசித்து வந்தார்.

புதுக்கோட்டை அருகே உள்ள அன்னவாசலை சேர்ந்த கட்சி பிரமுகர் பழனிச்சாமி என்பவர் நேற்று இறந்துவிட்டார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று காலை 9.30 மணிக்கு முத்துக்குமரன் காரில் புறப்பட்டார். அவருடன் இந்திய கம்யூனிஸ்ட் புதுக்கோட்டை ஒன்றிய செயலாளர் முருகானந்தம் சென்றார். எம்எல்ஏவின் டிரைவர் சண்முகம் இன்று பணிக்கு வரவில்லை. அதனால், வேறு டிரைவரை ஏற்பாடு செய்திருந்தார். புது டிரைவர் மணிகண்டன் (31) காரை ஓட்டிச் சென்றார்.

இலுப்பூர் அருகே சொக்கநாதன்பட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, கார் டயர் திடீரென வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி ரோட்டோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த எம்எல்ஏ முத்துக்குமரன், உடல் நசுங்கி அந்த இடத்திலேயே பலியானார். முருகானந்தமும் டிரைவரும் படுகாயம் அடைந்தனர். விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இலுப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த இருவரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான முத்துக்குமரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

விபத்து குறித்த தகவல் பரவியதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்த முத்துக்குமரன், பி.காம் பட்டதாரி. கடந்த சட்டசபை தேர்தலில் திமுக வேட்பாளர் புதுக்கோட்டை பெரியண்ணன் அரசுவை எதிர்த்து போட்டியிட்டார். இவரது மனைவி சுசீலா, விழுப்புரம் கோர்ட்டில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.