உளுந்தூர்பேட்டை,ஏப்.9: உளுந்தூர்பேட்டை வட்டம் சேந்தநாடு கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளாக ஓர் ஆசிரியரே பாடம் நடத்தும் நிலை இருந்து வருகிறது. இப்பள்ளிக்கு கூடுதல் ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உளுந்தூர்பேட்டை வட்டம் சேந்தநாடு காலனியில் 1950-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 106 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் கடந்த 2 ஆண்டுகளாக பாடம் நடத்தி வருகிறார். ÷இந்தப் பள்ளியில் பாடம் நடத்துவதற்கு 3 ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும். இந்த ஊர், மாவட்டத்தின் கடைகோடி கிராமத்தில் உள்ளதாலும், பஸ் வசதி சரியாக இல்லாததாலும் இந்த பள்ளியில் பணியாற்ற ஆசிரியர்கள் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை.
தலைமையாசிரியர் மட்டும் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். அவருடைய சொந்த விடுப்புகள், அலுவலக சம்பந்தமான வேலைகள், அவருக்கு பி.ஆர்.சி மூலம் அளிக்கப்படும் பயிற்சி வகுப்புகள் ஆகிய நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறைதான். அவர் தினமும் 60 கி.மீ. தொலைவிலிருந்து பள்ளிக்கு வந்து செல்வதாகவும் அவர் பஸ் தவற விட்டாலும் அன்றும் பள்ளிக்கு விடுமுறைதான். மேலும் அவரது ஊருக்கு செல்ல மாலை நேரத்தில் பஸ் வசதி இல்லாததால் தினமும் மாலை 3.30 மணிக்கு அல்லது மதியம் பள்ளியை பூட்டி மாணவர்களுக்கு விடுமுறை விட்டு விடுவதாக பொதுமக்கள் பெற்றோர் கூறுகின்றனர்.
இந்த ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றி வருவதால், அவரை கண்டித்தால் அவரும் மாறுதல் பெற்று வெளியூர் சென்றுவிட்டால் பிள்ளைகளின் வாழ்க்கை, கல்வி அறிவு இல்லாமல் கேள்விக்குறியாகிவிடும் என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.
அதே வட்டத்தில் செயல்படும் களத்தூர் அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை கல்வி பயிலும் சுமார் 150 மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்துவதற்கு 6 ஆசிரியர்களும், தற்போது தொகுப்பூதிய அடிப்படையில் 3 ஆசிரியர்ளும் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். சேந்தநாடு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிக்கு மட்டும் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆதிதிராவிடர் நல தனிவட்டாட்சியர் ஏன் போதிய ஆசிரியர்களை நியமனம் செய்து அந்த மாணவர்களின் வளர்ச்சியில் ஆர்வம் காட்டுவதில்லை என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த பள்ளி மாணவர்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு போடப்பட்ட மினி டேங்க் கடந்த சில ஆண்டுகளாகச் செயல்படுவதில்லை. இதனால் மாணவர்கள் குடிநீருக்காக அருகிலுள்ள ஏரிக்கு செல்லவேண்டிய நிலையில் உள்ளனர். அப்படி செல்லும்பொழுது அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.
இந்த பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர் நியமனம் செய்யக்கோரி பெற்றோர்களும், தலைமையாசிரியரும் உளுந்தூர்பேட்டை ஆதிதிராவிட நல தனிவட்டாட்சியர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு நேரிலும், தபால் வாயிலாகவும் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
இந்த பள்ளி மாணவ, மாணவிகளின் எதிர்கால நலன் கருதி பள்ளி விடுமுறை இல்லாமல், பள்ளி நேரங்களில் முழுநேரமும் தொடர்ந்து செயல்பட மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.