Pages

Tuesday, April 10, 2012

பிளஸ் 2 முக்கியப் பாடங்களுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று தொடக்கம்.

சென்னை, ஏப்.9: பிளஸ் 2 முக்கியப் பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி அனைத்து மாவட்டங்களிலும் செவ்வாய்க்கிழமை (ஏப்.10) தொடங்குகிறது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 8 முதல் 30-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 8.2 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இதைத் தொடர்ந்து தமிழ், ஆங்கிலம் உள்ளிட்டப் பாடங்களுக்கான விடைத்தாள்களைத் திருத்தும் பணி, தமிழகம் முழுவதும் 47 மையங்களில் கடந்த 2-ம் தேதி தொடங்கியது.
மாநிலம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியரல்லாத பணியாளர்களும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் சேருவதற்கு முக்கியமான பாடங்களாகிய இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் ஆகியவற்றின் விடைத்தாள்கள் திருத்தும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ளது.
இப்பாடங்களுக்கான விடைத்தாள்களுக்கு டம்மி எண் வழங்கப்பட்டு வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
விடைத்தாள்களை திருத்தும் பணியை ஏப்ரல் 30-ம் தேதிக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதிக விடைத்தாள்கள் உள்ள மையங்களில் இந்தப் பணிகள் ஓரிரு நாள்கள் தாமதமாக முடிவடையலாம் என அரசுத் தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
முக்கியப் பாடங்களுக்கான விடைத்தாள்களை திருத்திய பிறகு, அந்த விடைத்தாள்களில் உள்ள டம்மி எண்ணுக்குரிய தேர்வர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் பணி, கணினியில் மேற்கொள்ளப்படும்.
முதல் முறையாக இந்த ஆண்டு பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.இந்த மதிப்பெண் சான்றிதழ்களை அச்சடிப்பதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான பிறகு மே இறுதி வாரத்தில் மாணவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.