Pages

Tuesday, April 10, 2012

பள்ளியிலேயே நற்பண்புகளை கற்றுக்கொடுக்க வேண்டும்.

வேலூர், ஏப். 9: நாட்டில் குற்றங்கள் குறைய பள்ளி அளவிலேயே மாணவர்களுக்கு நற் பண்புகளை கற்றுக்கொடுக்கவேண்டும் என்றார் விஐடி வேந்தர் ஜி. விசுவநாதன்.
வேலூர் தொரப்பாடியிலுள்ள சிறை மற்றும் சீர்திருத்த பயிற்சியக இயக்குநர் எம்.ஆர். அகமது 2010ஆம் ஆண்டுக்கான பேராசிரியர் எஸ்.எஸ். ஸ்ரீவத்சவா விருது பெற்றுள்ளார். குற்றவியல் படிப்பில் நுண்ணறிவுடனும், ஆராய்ச்சி புலமையுடனும் பயிற்றுவித்தமைக்காக மும்பையில் அண்மையில் நடந்த விழாவில் டாடா சமூக அறிவியல் நிறுவனம் சார்பில் இந்த விருது வழங்கப்பட்டது.
இதையடுத்து அகமதுவுக்கு பாராட்டு விழா தொரப்பாடி அப்கா வளாகத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இதில் பங்கேற்று விஐடி வேந்தர் ஜி. விசுவநாதன் பேசியது: இந்தியாவில் தொடர்ந்து குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கின்றன.
இந்தியாவில் 2010ஆம் ஆண்டில் 38,000 கடத்தல், 22,000 கற்பழிப்பு, 33,000 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் மொத்தம் 1,348 சிறைகள் உள்ளன. குற்றவாளிகளில் 25 முதல் 30 சதவீதம் பேர் சிறைக்கு அனுப்பப்படுகின்றனர்.
மக்களின் பொருளாதார நிலையும், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்து வருகிறது. ஏழை மாணவர்களுக்கு பள்ளிக்கல்வியும், நடுத்தர மக்களுக்கு உயர்கல்வியும் கிடைக்கிறது. இருந்தபோதும் அதிகரித்துவரும் குற்றங்களை குறைக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கு மாணவர்களுக்கு பள்ளி அளவிலேயே நல்ல பண்புகளை கற்றுக்கொடுக்கவேண்டும் என்றார் அவர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.