புதுடில்லி: "மத்திய அரசு கொண்டு வந்துள்ள கல்வி உரிமைச் சட்டம் செல்லும்' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம் அனைத்துப் பள்ளிகளிலும், ஏழைகளுக்கு, 25 சதவீத இடம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2009ல், கல்வியை அடிப்படை உரிமையாக்கி, மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தின் படி, அனைத்துப் பள்ளிகளும், தங்களுக்கு உள்ள மொத்த இடங்களில், 25 சதவீதத்தை, ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கி, இலவச கல்வி அளிக்க வேண்டும். அனைத்து மாநில அரசுகளும், 6ல் இருந்து, 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு, கட்டாய, மற்றும் இலவச கல்வி அளிக்க வேண்டும்.
ரத்து கோரி மனு: மத்திய அரசின் இந்தச் சட்டத்தை எதிர்த்து, அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில், "மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டம், தனியார் பள்ளிகளுக்கு உள்ள உரிமைகளை மீறும் வகையில் உள்ளது. அரசின் தலையீடு இன்றி, தனியார் பள்ளி நிர்வாகங்கள், பள்ளிகளை நடத்தலாம் என, ஏற்கனவே விதிமுறை உள்ளது. இந்த விதிமுறையை மீறி, தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு உள்ள தன்னாட்சி அதிகாரத்தில் தலையிடும் வகையில், இந்தச் சட்டம் உள்ளது; இதை ரத்து செய்ய வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டது.
ஏழை மாணவர்களுக்காக... : இந்த மனுக்கள் மீதான விசாரணை, நீண்ட நாட்களாக நடந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் நீதிமன்றத்தில், "சமுதாய ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், பின் தங்கியுள்ள மாணவர்களை, உயர்ந்த நிலைக்கு கொண்டு வரும் நோக்கத்தில் தான், இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கல்வி விஷயத்தில் மாணவர்களுக்கு பாரபட்சம் காட்டக் கூடாது என்ற நோக்கத்துடனும், ஏழை மாணவர்களும் தரமான கல்வியைக் கற்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் தான், இந்தச் சட்டம் கொண்டு
வரப்பட்டது' என, தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்து, கடந்தாண்டு ஆகஸ்டில் இந்த வழக்கு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. சட்டம் செல்லும் : இந்நிலையில், தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா, நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஸ்வாதந்தர் ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: கல்வியை அடிப்படை உரிமையாக்கி, மத்திய அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும். ஏழை மாணவர்களுக்கு, 25 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என, இந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தச் சட்டம், அரசு பள்ளிகள், மற்றும் அரசு உதவி பெறும், மற்றும் உதவி பெறாத தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தும். ஆனாலும், அரசு உதவி பெறாத, சிறுபான்மை தனியார் பள்ளிகளுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது. இந்தச் சட்டம், இன்று (நேற்று) முதல் அமலுக்கு வருகிறது. இந்தச்சட்டம், எதிர்கால மாணவர் சேர்க்கைக்குத் தான் பொருந்தும். கடந்த கால மாணவர் சேர்க்கைக்குப் பொருந்தாது. குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு தான், சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
வேறுபாடு: இந்த வழக்கை விசாரித்த அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதி ராதாகிருஷ்ணன், "அரசிடம் இருந்து, எந்தவிதமான மானியமோ, உதவியோ பெறாத தனியார் பள்ளிகளுக்கும், உதவி பெறாத சிறுபான்மையினர் பள்ளிகளுக்கும், இந்தச் சட்டம் பொருந்தாது' என, தெரிவித்துள்ளார். ஆனால், அமர்வில் இடம் பெற்றிருந்த மற்ற இரண்டு நீதிபதிகளும், "அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும்'என, தீர்ப்பளித்தனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.