Pages

Thursday, March 15, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு: பி.லிட். படித்தவர்கள் எந்தத் தாளை எழுதலாம்? தேர்வு வாரியம் விளக்கம்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் பி.லிட். தமிழ்ப் பட்டதாரிகள் எந்தத் தாளை எழுதுவது என்பது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூன் 3-ம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் காலை முதல் தாளும், பிற்பகல் இரண்டாம் தாளும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புபவர்கள் முதல் தாள் தேர்வையும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புபவர்கள் இரண்டாம் தாள் தேர்வையும் எழுதலாம்.
பி.லிட். மற்றும் பி.எட். படித்தவர்கள் இரண்டாம் தாளை எழுதலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பி.லிட். படிப்போடு டிப்ளமோ படித்தவர்கள், புலவர் பயிற்சி முடித்தவர்கள் எந்தத் தாளை எழுத வேண்டும் என்பது தொடர்பாக பலர் விளக்கம் கேட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் கூறியதாவது:
பிளஸ் 2 படிப்புக்குப் பிறகு ஆசிரியர் டிப்ளமோ பட்டத்தையும், அதன் பிறகு பி.லிட். பட்டமும் பெற்றவர்கள் முதல் தாளையும், இரண்டாம் தாளையும் எழுதலாம்.
பிளஸ் 2 படிப்புக்குப் பிறகு பி.லிட். பட்டமும், புலவர் பயிற்சியும் முடித்தவர்கள் இரண்டாம் தாளை எழுதலாம்.
இணையதளத்தில் வெளியீடு: ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக எழும் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் எளிய வினா, விடை அமைப்பிலான தகவல்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் விரைவில் வெளியிடப்பட உள்ளன.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இவை வெளியிடப்பட உள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.