Pages

Friday, May 5, 2017

முதுநிலை மருத்துவ கல்விக் கட்டணம் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்

’முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை கட்டண நிர்ணயக் குழு ஓரிரு தினங்களில் வெளியிடும்’ என, சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார். முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சென்டாக் கவுன்சிலிங் குறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:


கடந்த காலங்களில் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி, ஒன்றிரண்டு இடங்களை குறைத்துக் கொண்டு அரசு ஒதுக்கீடு இடங்கள் பெறப்பட்டன. ஆனால், இந்த முறை முதுநிலை மருத்துவ படிப்பு விஷயத்தில் மத்திய அரசு விதிமுறை தெளிவாக கூறப்பட்டுள்ளது.

முதுநிலை மருத்துவ படிப்பில் 50 சதவீத இடங்கள் அரசு ஒதுக்கீடாகவும், 50 சதவீத இடங்கள் நிர்வாகமும் நிரப்ப வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.முதலில் பேச்சுவார்த்தைக்கு வர மறுத்த தனியார் கல்லுாரிகள், தற்போது 50 சதவீத இடங்களை தர முன்வந்து, பொது கவுன்சிலிங்கிலும் பங்கேற்க உள்ளன.

ஓரிரு நாட்களில் அறிவிப்பு

கல்விக் கட்டணம் சுகாதாரத் துறை கட்டுபாட்டில் இல்லை. முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு கல்விக் கட்டண நிர்ணயிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
கவுன்சிலிங் துவங்குவதற்கு முன்பாக 25 நாட்களுக்கு முன்பாகவே, கல்விக் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என, கடிதம் அனுப்பப்பட்டு விட்டது. 

ஓய்வு பெற்ற நீதிபதிக்கு உடல் நிலை சரியில்லாததால் உடனடியாக கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. ஓரிரு தினங்களில் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான கல்விக் கட்டணத்தை, கட்டண நிர்ணயக் குழு வெளியிடும்.

இன்று கவுன்சிலிங்

கடந்த 2ம் தேதி முதுநிலை பல் மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங் நடந்தது. இன்று, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. கல்விக் கட்டணம் நிர்ணயிக்கும் வரை மாணவர் சேர்க்கை பாதிக்கப்படாமல் இருக்க ஒரு யோசனை வைத்துள்ளோம்.

உறுதிமொழி

ஒரு குறிப்பிட்ட கல்விக்கட்டணத்தை பெற்றுக்கொண்டு கல்லுாரியில் மாணவர் சேர்த்துக் கொள்ளலாம். கல்விக் கட்டண நிர்ணயக் குழு, கட்டணத்தை நிர்ணயித்த பிறகு, அதற்கேற்ப கட்டணத்தை கூடுதலாக கட்டவோ அல்லது குறைத்தோ வாங்கிக் கொள்ளலாம். இதற்காக மாணவர்களும், பெற்றோர்களும் உறுதிமொழி தரவேண்டி இருக்கும்.

தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் முதுநிலை மருத்துவ கவுன்சிலிங் இன்னும் நடக்கவில்லை. இதில் புதுச்சேரி மாநிலம் மிகவும் வேகமாக முதலிடத்தில் உள்ளது. முதுநிலை மருத்துவ கவுன்சிலிங் தொடர்பான ஒவ்வொரு நடவடிக்கையும் உடனடியாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.