Pages

Wednesday, March 8, 2017

SSLC பொதுத்தேர்வு : பிப். 27-க்கு முன் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே தமிழ் மொழி பாடத் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு

மொழிச் சிறுபான்மைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பொதுத் தேர்வின் போது தமிழ் மொழி பாடத் தேர்வை எழுதுவதில் இருந்து விலக்களித்து உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு பிப்ரவரி 27-ஆம் தேதிக்கு முன் விண்ணப்பித்த மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

அதன் பின்னர், விண்ணப்பித்த மாணவர்களின் மனுக்கள் குறித்து அரசே உரிய முடிவு எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை, தமிழக அரசு கடந்த 2006-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தால், மொழிச் சிறுபான்மைப் பள்ளிகள் உள்பட அனைத்து வகையான பள்ளிகளிலும் முதல் பாடமாக தமிழ் கட்டாயமாக்கப்பட்டது.


குறிப்பாக தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது உள்ளிட்ட பிற மொழி மாணவர்களும் பொதுத் தேர்வுகளின் போது, கட்டாயம் தமிழ் மொழிப் பாடத்தேர்வை எழுத வேண்டிய சூழல் உருவாகியது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, மொழிச் சிறுபான்மைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழ் மொழித் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்து, கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், இரண்டு பள்ளிகள் சார்பில் தங்களது பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு தமிழ் மொழிப் பாடத் தேர்வு எழுத விலக்கு அளிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள், பொறுப்பு தலைமை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களுக்குப் பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:

புதன்கிழமை (மார்ச் 8) நடைபெறும் பொதுத் தேர்வில், தமிழ் மொழித் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு பிப்ரவரி 27-ஆம் தேதிக்கு முன்னர் விண்ணப்பித்த மாணவர்களுக்கு மட்டுமே பிப்ரவரி 27-ஆம் தேதி பிறப்பித்த இடைக்கால உத்தரவு பொருந்தும். தனியாகவோ அல்லது பள்ளிகள் மூலமாகவோ விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும் இந்த இடைக்கால உத்தரவு பொருந்தும்.

பிப்ரவரி 27-ஆம் தேதிக்குப் பிறகு விண்ணப்பம் அளித்தவர்களுக்கு தமிழ் மொழித் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிப்பது அல்லது நிராகரிப்பது குறித்து மாநில அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.