ஏழு ஆண்டுகளாக தேங்கி கிடக்கும் வழக்குகள், அரசாணை விதிமீறல்கள், நிரப்பப்படாத ஆசிரியர், கல்வி அதிகாரிகள் பணியிடங்கள் உள்ளிட்ட எண்ணற்ற சவால்கள், பள்ளிக்கல்வித்துறை புதிய செயலர் உதயசந்திரனுக்கு காத்திருக்கின்றன.
பள்ளிகளுக்கு மூடுவிழா!
தமிழகத்தில், கடந்த ஏழு ஆண்டுகளாக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட, அரசு தொடக்கப்பள்ளிகள், மாணவர் சேர்க்கை சரிவை காரணம் காட்டி, மூடப்பட்டுள்ளன.
முறையான கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, ஆசிரியர்கள் காலிப்பணியிடம், கற்பித்தல் அல்லாத பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்துதல் உள்ளிட்ட காரணங்களால், அரசுப்பள்ளிகளின் தரம் பின்னுக்கு தள்ளப்பட்டு வருகிறது.
இதற்கு மாற்றுத்தீர்வாக, 2012ல், அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி முறை கொண்டு வரப்பட்டது. இதற்காக, பிரத்யேக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
சமச்சீர் கல்வித்திட்டம் துவங்கியபோது, எட்டாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்திட்டம் கொண்டு வரும் நோக்கில், புத்தகங்கள் அச்சிடப்பட்டன. இதற்கு, ஆசிரியர்கள் நியமிக்காததால், புத்தகங்கள் திரும்ப பெறப்பட்டு, தமிழ்நாடு பாடநுால் கழகத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ளன.
அரசு வேலை கிடைக்கும் கனவில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள், போராட்டங்கள் நடத்தி, மனு அளித்து காத்திருக்கின்றனர்.
’நீட்’ தேர்வு கட்டாயமாக்கப்பட்ட நிலையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, மேல்நிலை வகுப்பு பாடத்திட்டம் மாற்றப்படாமல் உள்ளது. இதேபோல், தொழிற்கல்வி பாடத்திட்டம், 36 ஆண்டுகளுக்கும் மேலாக, மாற்றப்படவில்லை. இப்பிரிவில், ஆசிரியர்கள் ஓய்வு பெற்றால், புதிய ஆசிரியர்கள் நியமிக்காததால், பாடத்திட்டம் முடங்கி வருகிறது.
பள்ளிகள் திண்டாட்டம்
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், கணினி அறிவியல் உள்பட, தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் கொண்டுவரப்படவில்லை. மேலும், அனைத்து வகை அரசுப்பள்ளிகளிலும், 600க்கும் மேற்பட்ட, அலுவலக பணியாளர் இடங்கள் காலியாக உள்ளன. இரவு நேர காவலர், துப்புரவு பணியாளர்கள், 90 சதவீத அரசுப்பள்ளிகளில் நியமிக்கப்படவில்லை.
அரசுப்பள்ளிகளில், தையல், இசை, ஓவியம், விளையாட்டு உள்ளிட்ட கலைப்பாடப்பிரிவுகளுக்கு, 2013க்கு பின், புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. டி.ஆர்.பி., மூலம், போட்டித்தேர்வுகள் நடத்தி, காலிப்பணியிடம் நிரப்ப, 2014ல் அரசாணை வெளியிட்டும், தற்போது வரை, தேர்வு அறிவிப்பு வெளியிடவில்லை.
மைதான வசதியின்மை, விளையாட்டு ஆசிரியர் காலிப்பணியிடங்களால், அரசுப்பள்ளி மாணவர்கள், குறுமைய அளவிலான போட்டிகளில் கூட, பங்கேற்க முடியாத நிலை உள்ளது.
தமிழகம் முழுக்க, 60 மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. வரும் மே மாதத்துக்குள், 30 கல்வி அதிகாரிகள் ஓய்வு பெறுவதால், காலிப்பணியிடங்கள் உடனடியாக நிரப்பினால் மட்டுமே, அடுத்த கல்வியாண்டில், எவ்வித சிக்கலும் இன்றி, திட்டங்கள் செயல்படுத்த முடியும் என, ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு, சிறப்பு ஆசிரியர்களுக்கான கல்வித்தகுதி, ஆசிரியர் பணிநியமனம், கணினி பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பின்மை உள்ளிட்ட, பல்வேறு பிரச்னைகளுக்கு, மாநிலம் முழுவதும், ஒன்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள், சென்னை, மதுரை கிளை உயர்நீதிமன்றங்களில், பதிவு செய்யப்பட்டுள்ளன.
பள்ளிக்கல்வி துறைக்கு எதிராக, துறை சார்ந்தும், துறை சாராதோர் சார்பில், பொதுநலப்பிரிவுகளிலும், பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்கு, ஆவணங்கள் சமர்பிக்க, மாவட்ட வாரியாக, கல்வித் துறை அலுவலர்கள், நீதிமன்ற தொடர்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு, நீதிமன்ற நடைமுறைகள் சார்ந்த அடிப்படை புரிதல் இல்லாததால், வழக்குகள் விரைந்து முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு, அனைத்து மாவட்டங்களிலும், அரசு வழக்கறிஞர்களை, சட்ட ஆலோசகர்களாக நியமிக்க வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில தலைவர் சாமி சத்தியமூர்த்தி கூறுகையில், ”பள்ளிக்கல்வி நிர்வாகத்தின் மீது, ஆசிரியர்களுக்கு இருக்கும் அதிருப்தியை, கோர்ட்டில் தேங்கி கிடக்கும் வழக்குகளால் அறியலாம். நலத்திட்ட பொருட்கள் டெண்டர் விடுவது முதல் ஊழல் துவங்குகிறது.
”தரமற்ற சைக்கிள், லேப்டாப், புத்தக பை, சீருடை வழங்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்கில், வெளிப்படைத்தன்மை இல்லை. அரசுப்பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த, கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருவதோடு, காலிப்பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட வேண்டும்,” என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.