Pages

Friday, March 10, 2017

விடைத்தாள் திருத்தும் பணியில் அலட்சியம்

கோவை, பாரதியார் பல்கலையில், விடைத்தாள் திருத்துவதில், ஆசிரியர்களின் அலட்சியம் அம்பலம் ஆகியுள்ளது. கடந்த கல்வியாண்டில் நடந்த பருவத் தேர்வுகளில், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்ததில், 2,106 மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 


பல்கலை பருவத் தேர்வுகள், ஒவ்வொரு கல்வியாண்டிலும், நவ., மற்றும் ஏப்., மாதங்களில் நடைபெறும். இதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தினத்தில், விடைத்தாள் நகல் பெறவும், மறு மதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கவும், மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

இதற்காக, மாணவர்கள், 500 முதல் 600 ரூபாய் வரை, கட்டணம் செலுத்த வேண்டும். கோவை பாரதியார் பல்கலை, 2015 - 16ம் கல்வியாண்டில், தேர்வு முடிவுக்குப் பின், 8,675 மாணவர்கள், மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தனர். இதில், 2,106 மாணவர்களுக்கு, மதிப்பெண் மாற்றப்பட்டு, புதிய மதிப்பெண் சான்றிதழ்கள் வினியோகிக்கப்பட்டன. 

பல்கலை பேராசிரியர் சங்க மாநிலப் பொதுச் செயலர் பசுபதி கூறியதாவது: கடந்த, 2015 நவம்பரில் நடந்த தேர்வுகளில், 1,024 மற்றும் 2016 ஏப்ரலில் நடந்த தேர்வுகளில், 2,016 பேரின் மதிப்பெண்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதில், 178 மாணவர்களுக்கு, 25க்கு மேல் கூடுதலாக மதிப்பெண் கிடைத்தது. 

மாணவர்கள் எதிர்காலம் தொடர்பான செயற்பாடுகளில், ஆசிரியர்களின் அலட்சியம் கண்டிக்கத்தக்கது. அலட்சியமாகச் செயல்படும் ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் திருத்தும் பணி வழங்கக் கூடாது. மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்து, கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, கட்டணத்தை திருப்பி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பல்கலை துணைவேந்தர் கணபதி கூறுகையில், ”செனட் கூட்டத்தில், இது குறித்த விவாதம் நடந்தது. சிண்டிகேட் கூட்டத்தில் தெரிவித்து, கட்டணத்தை திரும்ப அளிப்பது குறித்து முடிவு செய்வோம்,” என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.