தேர்வு பயம் மற்றும் தேர்வுகளில் ஏற்படும் எதிர்பாராத தோல்விகளில் இருந்து தப்பிக்க, பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுத் தேர்வுகளை சந்திக்கும், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பள்ளியிலும், வீட்டிலும், முறையான அறிவுரைகள் அவசியம்.
தேர்வு குறித்த பயத்தை நீக்கும் வகையிலும், தேர்வு சரியாக எழுதவில்லை எனில், மாணவர்கள், விபரீத முடிவுகளை எடுக்காமல், அதிலிருந்து மீண்டு வரும் மனவலிமையும், ஏற்படுத்துதல் வேண்டும்.
பள்ளிகளில், ஆசிரியர்கள் சார்பிலும், சில தன்னார்வ அமைப்புகள் மூலமும், மாணவர்களுக்கு இதுகுறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கூடுவாஞ்சேரியை அடுத்த ஊரப்பாக்கத்தில், சந்தோஷ் குமார், 18, என்ற மாணவர், தேர்வு சரியாக எழுதாத காரணத்தால், சில நாட்களுக்கு முன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது, தேர்வு எழுதும் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு, பிரச்னைகளில் இருந்து வெளி வருதல் குறித்து, இனி வருங்காலங்களில், பள்ளிகளிலும், வீட்டிலும் கற்பிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
விழிப்புணர்வு வழங்கப்பட்டுள்ளது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் சமூகப் பாதுகாப்பு துறை மூலம், மாணவர்களிடையே தேர்வு பயத்தை போக்குவது குறித்து, இரண்டு கட்டமாக, பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே விழிப்புணர்வு நடவடிக்கைகள் துவங்கி விட்டன. இது தவிர்த்து, மதுராந்தகம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல பகுதிகளில், பாடல்கள் மற்றும் கலந்துரையாடல் மூலம், நேரடியாக மாணவர்களிடம், தேர்வு பயத்தை கைவிட விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறோம்.
மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த, 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு, நேரடி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, மாணவர்களுக்கிடையேயான விழிப்புணர்வு முயற்சிகள் மேலும் அதிகப்படுத்தப்பட உள்ளன.ஐ.டேவிட் பால், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, காஞ்சிபுரம்
தேர்வு தான் வாழ்க்கை இல்லை
பொதுத் தேர்வு என்பது, அனைத்து வகுப்புகளுக்கும் நடப்பதைப் போன்ற வழக்கமான தேர்வு முறை தான். அரசே நேரடியாக நடத்துவது மட்டுமே வித்தியாசம். ஆனால், பொதுத் தேர்வு குறித்து, மாணவர்களுக்கு, தற்போது அதிக பாரம் சுமத்தப்படுவதாக தோன்றுகிறது.
பள்ளிகளிலும், வீட்டிலும், எந்நேரமும் படிப்பிலேயே கவனம் செலுத்தச் சொல்வதைக் கேட்க முடிகிறது. இந்த எண்ணம் மாற வேண்டும். பொதுத் தேர்வில் தவறினால், அடுத்த வாய்ப்பும் உண்டு. அதுமட்டுமின்றி, பொதுத் தேர்வுகள் தான், வாழ்க்கையை தீர்மானிப்பதாக கருதுதல் தவறு.சி. அருணாச்சலம், சமூக ஆர்வலர், ஊரப்பாக்கம்
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.