Pages

Tuesday, March 28, 2017

கடினமானது கணிதம்; பிளஸ் 2 சென்டம் சரியும்!

பிளஸ் 2 கணிதத் தேர்வில், கட்டாய வினா மிகவும் சிக்கலானதாக இருந்ததால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதனால், இருநுாறுக்கு இருநுாறு சென்டம் சரியும் என, தெரிய வந்துள்ளது.


பிளஸ் 2வில், நேற்று கணிதத் தேர்வு நடந்தது. கடந்த ஆண்டை போல, இந்த ஆண்டும் கணிதத் தேர்வு, மாணவர்களை அதிர வைத்தது. பெரும்பாலான மாணவர்கள், 6 மதிப்பெண் மற்றும், 10 மதிப்பெண் வினாக்களுக்கு, விடையளிக்க திணறினர்.

ஆறு மதிப்பெண் வினாக்களில், கட்டாய வினாக்கள் எளிதாக கேட்கப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான மாணவர்கள், படிக்காமல் தவிர்க்கும், பகுமுறை வடிவியல் என்ற பாடத்திலிருந்து, 55ம் எண் கேள்வி, இடம் பெற்றிருந்தது.

அதேபோல், 10 மதிப்பெண் வினாவில், 70வது எண் கட்டாய வினாவில், ஐந்தாவது மற்றும் எட்டாவது பாடத்திலிருந்து கேட்கப்பட்டிருந்தது. இந்த பாடங்களுக்கும், மாணவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதனால், பல மாணவர்கள் கட்டாய வினாக்களில், பதில் அளிக்க திணறினர்.

வினாத்தாள் குறித்து, பி.ஏ.கே.பழனிசாமி மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியர் ராஜ் கூறியதாவது: மாணவர்களின் தேர்ச்சி பாதிக்காத வகையில், வினாத்தாள் இருந்தது. ஆனால், சராசரி மாணவர்களையும், நன்றாக படிக்கும் மாணவர்களையும், மதிப்பீடு செய்யும் வகையில், வினாத்தாள் கடினமாக அமைந்துள்ளது.

குறிப்பாக, 6 மற்றும், 10 மதிப்பெண்களுக்கான, கட்டாய வினாவில், பதில் எழுத அதிக நேரம் தேவைப்பட்டுள்ளது. அதனால், சென்டம் பெருமளவு குறையும். இவ்வாறு அவர் கூறினார். நேற்றைய தேர்வில், ஆறு மாணவர்கள் காப்பியடித்து பிடிபட்டனர். 

10 ஆண்டுகளில் இல்லாத கடினம்! : தமிழக அரசின், ’ப்ளூ பிரின்ட்’ அடிப்படையில், 6 மதிப்பெண் வினாக்களில், ஒரு வினாவிற்குள், மூன்று சிறிய வினாக்களை வைத்து, தொகுப்பாக கேட்கலாம். இதன்படி, 10 ஆண்டுகளில், 2012ல் மட்டும், மூன்று சிறிய வினாக்களை கொண்ட தொகுப்பு வினாக்கள், 6 மதிப்பெண் பகுதியில் இடம்பெற்றன. 

அப்போது, வினாத்தாள் முழுவதும் எளிமையாக இருந்துள்ளது. இந்நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு பின், நேற்றைய கணிதத் தேர்வில், 6 மதிப்பெண் பகுதியில், ஒரு வினாவில், மூன்று சிறிய வினாக்கள் அடங்கிய தொகுப்பு வினாக்கள், மூன்று இடங்களில் இடம்பெற்றன. 

இந்த வினாக்களும் கடினமாக இருந்ததால், 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கணிதத் தேர்வு கடினமாக இருந்ததாக, ஆசிரியர்கள் கருதுகின்றனர். 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.