Pages

Tuesday, February 7, 2017

சொற்களை தடுமாறாமல் உச்சரிக்க மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சி!

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு, வகுப்பு நேரத்தில், குறைந்தபட்சம் 10 நிமிடமாவது, சொற்களை சரியான ஒலி உச்சரிப்பில், சத்தமாக வாசிக்க பயிற்சி அளிக்க வேண்டும் என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வித்திட்டம் நடைமுறைக்கு வந்த பின், செயல்வழி கற்றல் அட்டைகள் கொண்டு, தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு, பாடம் நடத்தப்படுகிறது. 


இதில், மாணவர்களுக்கு, எழுத்து, வாசிப்புக்கான நேரம் குறைவாகவே செலவிடப்படுகிறது. மாணவர்கள் பதில் கூறும் திறனை பரிசோதித்து, கற்றல் அட்டையில் ஆசிரியர்கள் மதிப்பெண்கள் இடுகின்றனர்.

இப்பணிக்கே நேரத்தை செலவிடுவதால், மாணவர்களின் எழுத்து, வாசிப்பு திறன் வளர்க்க போதிய நேரமில்லை என்ற, புகார் எழுந்துள்ளது. இதற்காக, அனைவருக்கும் கல்வி இயக்ககம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில், மாணவர்களின் கற்றல் திறன் அறிய, அடைவு தேர்வு, திறனறி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இதுதவிர, வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த, செய்தித்தாள் படித்தல், பாடப் புத்தகம், பொது அறிவு, சிறுகதை புத்தகங்களை வாசிக்க, பயிற்சி அளிக்குமாறு, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, எஸ்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள் கூறுகையில், ’அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், எழுத்து, வாசிப்பு திறனுக்கு, செய்முறை பகுதிகளில், மதிப்பெண்கள் அளிக்கப்படுகின்றன. இதில், பின்தங்கிய மாணவர்களுக்கு, தமிழ், ஆங்கில எழுத்து, சொல் உச்சரிப்பு முறை குறித்து, வாசிப்பு பயிற்சி அளிக்க, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வகுப்பிலும், இறுதி பத்து நிமிடங்களை, வாசிப்பு நேரமாக ஒதுக்கவும், தினசரி தலைமையாசிரியர்கள், வகுப்புக்கு சென்று, பார்வையிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை, வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள், பள்ளிக்கு செல்லும் போது, ஆய்வு செய்வர்’ என்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.