Pages

Monday, January 9, 2017

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் 11 பேர் நியமனம் ரத்து: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் 11 பேர் நியமனத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் ரத்து உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்ததோடு, டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களை மறு தேர்வு செய்து கொள்ளலாம் என்றும், அந்த 11 பேரில் 10 பேரை மீண்டும் தேர்வு செய்து கொள்ளலாம் என்றும், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமமூர்த்தியை மட்டும் மீண்டும் தேர்வு செய்யக் கூடாது என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் பின்னணி :
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) உறுப்பினர்களாக வழக்குரைஞர்கள் ஆர்.பிரதாப்குமார், வி.சுப்பையா, எஸ்.முத்துராஜ், எம்.சேதுராமன், ஏ.வி. பாலுச்சாமி, எம்.மாடசாமி, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி வி.ராமமூர்த்தி, பொறியாளர்கள் பி.கிருஷ்ணகுமார், ஏ.சுப்பிரமணியன், என்.புண்ணியமூர்த்தி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.ராஜாராம் ஆகிய 11 பேரை தமிழக அரசு நியமித்தது.

இந்நிலையில், இந்த நியமன நடவடிக்கை சட்ட விதிகளின்படியும் உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள நெறிமுறைகளின்படியும் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறி மாநிலங்களவை திமுக உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், சமூக நீதிப் பேரவை தலைவர் கே.பாலு, புதிய தமிழகம் கட்சி தலைவர் எஸ்.கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

இந்த வழக்கை கடந்த டிசம்பர் 22-இல் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, "டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக 11 பேரை நியமிக்க கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறையில் வெளிப்படைத் தன்மை இல்லை. எனவே, இதுதொடர்பாக கடந்த ஜனவரி 31-ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது" என்று தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அதில்,"டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட 11 பேரும் தகுதி வாய்ந்தவர்கள்.

பொது நிர்வாகப் பணிகளில் அனுபவம் பெற்றிருப்பவர்கள். உறுப்பினர்களின் தகுதி, பொது வாழ்வு பின்னணி, அனுபவம் போன்ற கூறுகளை சென்னை உயர் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளாமல் தீர்ப்பளித்துள்ளது. எனவே, அத்தீர்ப்பை ரத்து செய்து தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் நியமன நடவடிக்கை தொடர்பான மாநில அரசின் அறிவிக்கையை உறுதிப்படுத்தி நீதி வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.