Pages

Tuesday, December 20, 2016

அரசு பள்ளி மாணவர் சேர்க்கை: தமிழகம் முதலிடம்: அமைச்சர் கே.பாண்டியராஜன் பெருமிதம்

அரசு பள்ளி மாணவர் சேர்க்கை விகிதத்தில் நாட்டிலேயே தமிழகம் முன்னிலை பெற்றுள்ளது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார். சென்னை முகப்பேர் கிழக்கில் உள்ள அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் 10,000 சதுர அடியில் ரூ.1.5 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பாண்டியராஜன் ஆகியோர் திங்கள்கிழமை திறந்து வைத்தனர். பின்னர் விழாவில் அமைச்சர் கே.பாண்டியராஜன் பேசியது:


தற்போதைய சூழலில் பள்ளிக் கல்வித் துறையில் மாணவர் சேர்க்கை நாடு முழுவதும் 5 சதவீதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் தனியார் பள்ளி மாணவர் சேர்க்கை 8 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மட்டுமே மாணவர் சேர்க்கை 1 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை 100 மாணவர்களில் 99 பேர் 6 -ஆம் வகுப்பையும், 95 சதவீதம் பேர் 10 -ஆம் வகுப்பையும், 80 சதவீதம் பேர் பிளஸ் 2 வகுப்பையும் நிறைவு செய்கின்றனர்.

அமெரிக்காவில் கூட கல்லூரி படிப்பை 100 -க்கு 30 சதவீதம் பேர் மட்டுமே நிறைவு செய்யும் நிலையில், தமிழகத்தில் ஆண்டுதோறும் 45 சதவீதம் பேர் கல்லூரி படிப்பை நிறைவு செய்கின்றனர். அடுத்த 5 ஆண்டுகளில் இதை 50 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பள்ளிக் கல்வியில் மதிப்பெண்ணுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் மாணவர்களின் கற்கும் திறனை வெளிப்படுத்தச் செய்வது, படிப்பு தவிர தனித்திறனை வளர்க்கும் செயல்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்துவது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பிளஸ் 2 வகுப்புக்கு புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன என்றார் அவர். விழாவில் அமைச்சர் பெஞ்சமின், அம்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலெக்ஸாண்டர், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.