தமிழ்நாட்டில் தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமறையான மே மாதம் நடத்துவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக சில நிர்வாக சிக்கலால் ஜூன் மாதம் நடந்து வருகிறது. இக்கலந்தாய்வில் ஆசிரியர்கள் பணி நிரவல், காலிப்பணியிடங்களில் தகுதியான ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அதன்பின் ஒன்றியத்திற்குள் மாறுதல், ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் என ஒவ்வொரு நாளும் நடப்பது வழக்கம்.
கடந்த ஜூன் மாதமும் இவ்வாறு கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. ஒவ்வொரு பொது மாறுதல் கலந்தாய்வு நடந்து முடித்த பின்னால் ஏற்படும் காலிப் பணியிடங்களில் அந்தந்த ஒன்றியங்களில் தகுதி வாய்ந்த தேர்ந்தோர் பட்டியலில் உள்ள ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மட்டும் வழங்குவது வழக்கம். இப்பதவி உயர்வை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலரே தனக்குள்ள அதிகார வரம்பிற்குள் செய்து முடித்துக்கொள்ளலாம். மேலும் கல்வியாண்டின் இடையில் ஏதாவது ஆசிரியர் மரணமடைந்து அதனால் ஏற்படும் காலிப்பணியிடங்களில் மாணவர்கள் நலன் கருதி தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வை உடனடியாக அந்தந்த மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்கள் மேற்கொள்வார்கள். கடந்த சில ஆண்டுகளாக பொது மாறுதல் கலந்தாய்வு நடந்த முடிந்த பின்னால் ஏற்படும் காலிப்பணியிடங்கள் விபரம் சேகரிக்கப்பட்டு டிசம்பர் முதல் வாரத்தில் மாநிலம் முழுமைக்கும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தி பதவி உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது இரண்டாம் பருவ தேர்வு நடந்து வரும் நிலையில் தேர்வு முடிந்து ஒரு சில நாட்களில் பள்ளிகள் விடுமுறை விடப்படவுள்ளது. ஆனால் கல்வித்துறை இரண்டாம் கட்ட கலந்தாய்வு குறித்து எவ்வித அறிவிப்பையும் வெளியிடாமல் இருப்பது பதவி உயர்விற்காக காத்திருக்கும் ஆசிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே உடனடியாக கல்வித்துறை இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டுமென ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்திய பின்பு ஏற்படும் காலிப்பணியிடங்கள் மற்றம் இடையில் ஏற்படும் காலிப்பணியிடங்களில் இரண்டாம் கட்டமாக பதவி உயர்வு கலந்தாய்வு மட்டும் நடத்துவது வழக்கம். ஒரு சில ஆண்டுகளில் மூன்றாம் கட்ட பதவி உயர்வு கலந்தாய்வு கூட நடந்துள்ளது. டிசம்பர் மாத முதல் வாரத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டிய பதவி உயர்வை இது வரை நடத்தாது வருத்தமளிக்கிறது. தமிழக முதல்வர் மறைவையொட்டி தாமதமாகிறது என நாங்களும் பொறுமை காத்திருந்தோம். அதன் பின்பும் இது குறித்து கல்வி துறை மௌனம் சாதித்து வருகிறது. இது குறித்து எங்கள் இயக்கத்தின் சார்பாக தொடக்கக்கல்வி இயக்குனரிம் நேரடியாக மனு அளித்து வலியுறுத்தியுள்ளோம். கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு என்பது அரிதாக நடைபெறுவது. ஏனுவே காலம் தாழ்த்தாமல் தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு பதவி உயர்வினை உடனடியாக அளிக்க வேண்டுமென தொடக்கக் கல்வித் துறையை நாங்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம் என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.