Pages

Thursday, December 15, 2016

தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை: காவல் துறையில் அதிமுக புகார்

ஜெயலலிதா இறப்பு குறித்து சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் துறையில் அதிமுகவினர் புகார் செய்தனர். வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகரக் காவல் துறை அலுவலகத்துக்கு அதிமுக செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான சி.ஆர்.சரஸ்வதி, தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலச் செயலர் ராமச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் புதன்கிழமை மாலை வருகை தந்தனர்.

இதையடுத்து, சைபர் குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் வெங்கடாஜலபதியை சந்தித்து அவர்கள் புகார் மனு ஒன்றை அளித்தனர். பின்னர் சி.ஆர்.சரஸ்வதி, நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மறைந்த முதல்வர் ஜெயலலிதா இறப்பு குறித்து பொதுமக்களிடம் தவறான தகவல்களைப் பரப்பும் வகையில் முகநூல், சுட்டுரை, கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பான கருத்துகளையும், தகவல்களையும் சிலர் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

அதேபோல எனது செல்லிடப்பேசியை தொடர்பு கொண்டு சிலர் அவதூறாகப் பேசுகின்றனர். இதனால் கட்சியினரும், பொதுமக்களும் குழப்பமடைவதற்கு வாய்ப்பு உள்ளது. சமூக ஊடகங்களில் வதந்தியைப் பரப்பவதன் மூலம் அவர்களுக்கு என்ன பலன் கிடைக்கிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை.
ஆனால் சிறிதும் உண்மையில்லாத தகவல்களை சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுமக்கள் படிப்பதன் மூலம், அவர்களுக்கு தவறான புரிதல் ஏற்பட வாய்ப்பு ஏற்படுகிறது. இவ்வாறு தொடர்ச்சியாக தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.