பள்ளி மாணவ, மாணவியர் போதைப் பொருளைப் பயன்படுத்துவதையும், மது அருந்துவதைத் தடுக்கவும் 6 மாதத்தில் தேசிய செயல் திட்டத்தை வகுக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறார்களுக்கு மது கொடுப்பது, பள்ளி மாணவ, மாணவியர் மது அருந்திவிட்டு பள்ளி வருவது போன்ற நிகழ்வுகள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது அதிகரித்து வருகின்றன. இது தவிர போதைப்பொருள் கலந்த சாக்லெட் விற்பனை செய்யப்படுவதும் சில மாதங்களுக்கு முன்பு தெரியவந்தது.
இதனிடையே, அமைதிக்கான நோபல் பரிசு வென்ற கைலாஷ் சத்யார்த்தியின் குழந்தைகள் நல அமைப்பு சார்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், சிறார்கள் முக்கியமாக பள்ளி மாணவ, மாணவியர் போதைப் பொருள், மது அருந்துவதைத் தடுக்க வேண்டும்; அப்படி போதைப் பழக்கம் உள்ளவர்களை அதில் இருந்து மீட்க வேண்டும்; மது உள்ளிட்ட போதைப் பொருள்கள் மாணவர்களுக்கு கிடைப்பதைத் தடுக்க தேசிய அளவில் செயல்திட்டம் வகுக்க வேண்டும். நாட்டின் எதிர்காலமான மாணவர்களின் வாழ்க்கையைக் கெடுக்கும் போதைப்பொருளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். மது, போதைப்பொருள் ஆகியவற்றால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பாடத்திட்டம் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:
பள்ளி மாணவ, மாணவியர் மது, போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க மத்திய அரசு அடுத்த 6 மாதத்தில் தேசிய அளவில் செயல்திட்டம் வகுக்க வேண்டும். மாணவ, மாணவியர் மது உள்ளிட்ட போதைப்பொருள்களை பயன்படுத்தத் தொடங்கினால், அதற்கு அடிமையாகிவிடுவார்கள்.
எனவே, இதனைத் தடுக்க, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவியரிடையே போதைப் பழக்கம் ஏதும் உள்ளதா என்பதைக் கண்டறிய சோதனை நடத்த வேண்டும். அப்போதுதான் அதுபோன்ற தீய வழியில் இருந்து மாணவ, மாணவியரை மீட்க முடியும். போதைப் பொருள் விழிப்புணர்வு தொடர்பான தகவல்களை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.