Pages

Thursday, November 17, 2016

தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் ரொக்கமாக வழங்க வேண்டும் என கோரிக்கை

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரையில்  மாத ஊதியத்தை வங்கி கணக்கில் வரவு வைக்காமல், ரொக்கமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.  இதுகுறித்து தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் ஜெ.கணேசன் நேற்று முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:


மத்திய அரசு கடந்த வாரத்தில் அறிவித்த திட்டத்தால், தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் வசமுள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கிகளில் தவம் கிடக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதனால் வெகுவாக அலுவலக பணியும் பாதித்துள்ளது.
சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குடியிருப்பதற்கு போதிய அரசு வாடகை குடியிருப்புகள் இல்லாததால், பெரும்பான்மையோர் தனியார் வீடுகளில்தான் குடியிருந்து வருகின்றனர். இந்த குடியிருப்புகளுக்கான வாடகையானது ஒவ்வொரு அரசு ஊழியரின் ஊதியத்திலும் ஏறத்தாழ 25 சதவீதம் அளவிற்கு உள்ளது.  

இதைத்தவிர, மாதந்தோறும் தங்களது குழந்தைகளுக்கான கல்வி கட்டணம், வீட்டிலுள்ள பெரியவர்களுக்கான மருத்துவ செலவு, வீட்டு மளிகை பொருட்களை வாங்குவதற்கான செலவு உள்ளிட்ட செலவுகளை செய்ய இயலாமல் உள்ளனர். தற்போது, சம்பளம் உள்ளிட்ட அனைத்து பணப்பட்டுவாடாக்களும் ஊழியர்களின் வங்கி கணக்கில்தான் வரவு வைக்கப்படுகின்றன. 

தற்போதுள்ள வங்கி கட்டுப்பாடுகளால், மத்திய அரசின் வருமான வரித்துறைக்கு கணக்குக்களை முறையாக சமர்ப்பித்து, ஊதியத்தை பெற்றுவரும் ஊழியர்கள் தங்களது பண இருப்பை பெற இயலாமல் போகும் நிலை உருவாகி உள்ளது.  இந்த சூழ்நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையில் மாத ஊதியத்தை வங்கி கணக்கில் வரவு வைக்காமல், ரொக்கமாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறி உள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.