Pages

Thursday, October 27, 2016

அரசு ஊழியர்களுக்கு நாளையே ஊதியம் வழங்க வேண்டும்; ராமதாஸ்

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏற்கெனவே அறிவித்தபடி வெள்ளிக்கிழமையே (அக்.28) ஊதியம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தீபாவளி பண்டிகை சனிக்கிழமை(அக்.29) வருவதால், ஊதியத்தை முன்கூட்டியே வழங்குமாறு தமிழ்நாடு அரசு ஊழியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன. புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமையே (அக்.25) ஊதியம் வழங்கப்பட்டதால் தமிழக அரசு ஊழியர்களிடையே இந்தக் கோரிக்கை தீவிரமடைந்தது.


இதனையடுத்து வெள்ளிக்கிழமை ஊதியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில், அந்த அரசாணையை மாலையே ரத்து செய்த அரசு, வழக்கம்போல் 31 -ஆம் தேதி தான் ஊதியம் வழங்கப்படும் என்று புதிய அரசாணையை வெளியிட்டது. தமிழக அரசின் இந்த அணுகுமுறை எந்த வகையிலும் நல்லதல்ல. அரசின் இந்தக் குளறுபடியால் அரசுப் பணியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊதியத்தை முன்கூட்டியே வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தவறானதோ, நிறைவேற்றுவதற்கு சாத்தியமற்றதோ இல்லை. ஒருவேளை, சாத்தியமற்றதாக இருந்தால்கூட அதைச் சாத்தியமாக்குவதுதான் நிர்வாகத்தின் பணியாக இருக்க வேண்டுமே தவிர, அறிவித்ததைத் திரும்பப் பெறுவது முறை இல்லை. எனவே, அரசு ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான அக்டோபர் மாத ஊதியத்தை வெள்ளிக்கிழமையே வழங்க அரசு முன்வர வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.