Pages

Tuesday, October 18, 2016

வெற்றிக்கு தேவை 5 ‘சி’!

வெற்றி என்பது தானாக வருவதல்ல; தானமாகவும் கிடைப்பதல்ல. அது வியர்வைத் துளிகளின் விளைச்சல்! படுத்துக் கிடக்கும் சோம்பேறிக்கு பகல்கூட இரவுதான்; ஆனால், எழுந்து உழைப்பவனுக்குத் திரும்பும் திசையெங்கும் வெற்றிதான்!


வெற்றி பெற விரும்புகிறவர்கள், அதற்கு மூலாதாரமாக விளங்கும் 5‘சி’களை வளர்த்துக் கொண்டு, அவற்றைச் செதுக்கிச் செம்மை படுத்திக் கொண்டால் நொடிதோறும் வெல்லலாம். வாழ்க்கையை வரலாறாக்கி சாதனைச் சரித்திரத்தில் நிரந்தர இடம் பிடிக்கலாம்.

அது என்ன 5‘சி’ என்றுதானே கேட்கிறீர்கள். இதோ

1. ஒழுங்கு நெறிமுறைகள் - Character

திறமை இருந்தால் ஒருவனால் வெற்றி சிகரத்தை அடைய முடியும்; ஆனால் ஒழுக்கம் இல்லை என்றால் அங்கு நிலைத்து நிற்கமுடியாது. ஆகவே எல்லாவற்றுக்கும் நன்னடத்தையே அஸ்திவாரம்.

2. துணிச்சல் - Courage

நன்னடத்தையுடன் தொடர்ந்து நடந்து கொள்வதற்கு நெஞ்சில் துணிச்சல் வேண்டும். சூழ்நிலைகளுக்குள்ளாக கரைந்து போகாமல், தனது ஒழுக்க நெறியில் நின்று, நேர்மையான முறையில் செயல்படுவதற்கும், அப்பளுக்கற்ற நெறியில் செல்வதற்கும் துணிச்சலே துணை நிற்கிறது.

3. அறிவாக்கத்திறன் - Compentency

இனிப்பு இருந்தால் தான் அது கரும்பு; இல்லாவிட்டால் அது மூங்கலின் தம்பி! காரம்  இருந்தால் தான் அது மிளகாய் இல்லாவிட்டால் அது வெறும் குப்பை! அதுபோல தான் அறிவாக்கத் திறன் இருந்தால் தான் ஒருவனால் செயல் வீரனாக முடியும். அறிவு மட்டும் போதாது, அந்த அறிவைச் செயலாக்கும் திறனும் வேண்டும். இதை தான் அறிவாக்கத் திறன் என்று சொல்கிறார்கள்.

4. உள்ளார்ந்த செயலுறுதி - Commitment

கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதும், எடுத்த காரியத்தை முடித்துக் காட்டுவதும் திட்டமிட்டவாறு செயலாற்றி வெற்றிக் கனியைப் பறிப்பதற்கு நெஞ்சில் உறுதி இருக்க வேண்டும்.

5. படைப்பாற்றல் திறன் - Creativity

எந்தச் செயலையும் மேன்மையாகவும், சுலபமாகவும், சிக்கனமாகவும் செய்ய உதவுவது தான் படைப்பாற்றல் திறன். எதையும் வித்தியாசமாச் சிந்தித்து கற்பனை நளத்துடன் உயர்வாகச் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். எதையும் இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும் என்ற தீவிர எண்ணமே படைப்பாற்றலைத் தோற்றுவிக்கிறது.

-முனைவர் கவிதாசன்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.