உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, ஓர் ஆண்டு ஆகியும், பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவு வெளியாகாததால், தேர்வு எழுதியோர் அச்சம் அடைந்துள்ளனர். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, 2015 மே, 31ல் எழுத்துத் தேர்வு நடந்தது; எட்டுலட்சம் பேர் பங்கேற்றனர். எழுத்து தேர்வில் வெற்றி பெறுவோரில், ஒரு இடத்திற்கு, ஐந்து பேர் என்ற விகிதத்தில், நேர்முக தேர்வு நடத்தப்படும்.
அதில், அதிக மதிப்பெண் பெறுவோருக்கு, பணி ஒதுக்கப்படும் என,அறிவிக்கப்பட்டது. 'எழுத்து தேர்வு மதிப்பெண்ணை கணக்கிடா விட்டால், முறைகேடுகள் நடக்க வாய்ப்பு ஏற்படும்' எனக்கூறி, எழுத்துத் தேர்வில் பங்கேற்ற சதீஷ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை, நீதிபதி ஹரிபரந்தாமன் விசாரித்து, 2015, ஆக., 7ல் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில், 'கடைநிலை பணிகளுக்கு, நேர்முக தேர்வு நடத்த வேண்டிய அவசியம் இல்லை; தேவை என்றால், எழுத்து தேர்வு மதிப்பெண், வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் நேர்முக தேர்வு மதிப்பெண்ணை, மொத்தமாக கணக்கிட்டு, அதன்படி, இறுதி முடிவு அறிவிக்க வேண்டும்' என, உத்தரவிட்டார். ஓராண்டுக்கு மேலாகியும், தேர்வு முடிவு இன்னும் வெளியாகவில்லை.
இதுகுறித்து, அரசு பள்ளிஆய்வக உதவியாளர் தேர்வர்கள் கூட்டமைப்பு செயலர் என்.பிரசாந்த் கூறுகையில்,''தேர்வு முடிவை அறிவிக்க, உயர்நீதிமன்றம் தடை விதிக்கவில்லை; சில வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது. இதை பின்பற்றி முடிவை அறிவித்தால், எட்டு லட்சம் பேரின் ஏக்கத்திற்கு முடிவு கிடைக்கும். பலர், விண்ணப்ப எண்ணைக் கூட மறந்து விட்டனர்; பலர் கடனாளியாகி, வேறு வேலை தேடி அலையும் நிலைஉள்ளது,'' என்றார்.
குறுக்கு வழி கை கொடுக்குமா :
நேர்முகத் தேர்வில், அதிக மதிப்பெண் பெற்றோரின் பட்டியலை எடுத்து, ஆய்வக உதவியாளர் பணியில் சேர்த்து விடுவதாக, அரசியல்வாதிகள், அதிகாரிகள் சிலர், பேரம் நடத்தி, பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. எனவே, குறுக்கு வழியில், ரகசியமாக பணம் கொடுத்தோர், தங்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்குமா, பணம் பறிபோய்விடுமோ என்ற குழப்பத்தில் உள்ளனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.