Pages

Friday, September 23, 2016

தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள்: 7 கல்லூரிகள் மூலம் கூடுதலாக 593 இடங்கள்

தமிழகத்தில் கலந்தாய்வு அட்டவணையில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள 7 தனியார் மருத்துவக் கல்லூரிகள் மூலம் அரசு ஒதுக்கீட்டுக்கு கூடுதலாக 593 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைத்துள்ளன. சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். இரண்டாம் கட்டக் கலந்தாய்வு புதன்கிழமை (செப்.21) தொடங்கி இரவு 9.30 மணி வரை நடைபெற்றது.

இரண்டு புதிய மருத்துவக் கல்லூரிகள்: ஸ்ரீ பெரும்புதூர் அருகே பென்னலூரில் ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கல்வி அறக்கட்டளை ஏற்படுத்தியுள்ள அன்னை மருத்துவக் கல்லூரி, கல்பாக்கம் அருகே ஏற்படுத்தப்பட்டுள்ள "பொன்னையா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸஸ்' ஆகிய இரண்டு மருத்துவக் கல்லூரிகளிலும் தலா 150 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது; இந்த இரண்டு புதிய மருத்துவக் கல்லூரிகளிலிருந்தும் அரசு ஒதுக்கீட்டுக்கு எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைத்துள்ளன.

மேலும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி, சென்னை அருகே குன்றத்தூர் மாதா மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுக்கு புதுப்பித்தல் அனுமதியை இந்திய மருத்துவக் கவுன்சில் மீண்டும் வழங்கியுள்ளதால் இவற்றிலிருந்தும் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைத்துள்ளன. எனவே எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். இரண்டாம் கட்டக் கலந்தாய்வில் புதிய கல்லூரிகளைச் சேர்த்து மொத்தம் 13 தனியார் மருத்துவக் கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன; இவற்றின் மூலம் 715 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைத்து கலந்தாய்வு நடத்தப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

485 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்கள்: இரண்டாம் கட்டக் கலந்தாய்வின் முதல் தின (செப்.21) நிறைவுக்குப் பிறகு, 13 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 270 இடங்கள் நிரப்பப்பட்டு, 485 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்கள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 18 எம்.பி.பி.எஸ். இடங்களில், 14 இடங்கள் நிரப்பப்பட்டு 4 காலியிடங்கள் உள்ளன.

சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் ஒரு காலியிடம் உள்ளது. அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 16 இடங்களில், 4 பிடிஎஸ் இடங்கள் நிரப்பப்பட்டு 12 காலியிடங்கள் உள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்த 1,283 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள் ஒரு இடம் நிரப்பப்பட்டு 1,282 காலியிடங்கள் உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து கலந்தாய்வு: காலியிடங்களை நிரப்ப வரும் செப்டம்பர் 24-ஆம் தேதி வரை தொடர்ந்து கலந்தாய்வு நடைபெறும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.