Pages

Monday, August 8, 2016

மத்திய அரசு ஓய்வூதியம்157 சதவீதம் உயர்வு

ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகளின் படி, மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியம், 157 சதவீதம் உயர்த்தப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்தும் ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைகளை ஏற்று அதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.


இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள, 58 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியம் குறித்து மத்திய பணியாளர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: குறைந்தபட்ச ஓய்வூதியம், 3,500 ரூபாயிலிருந்து, 157.14 சதவீதம் உயர்த்தப்பட்டு, 9,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது

அதிகபட்ச ஓய்வூதியம், 1.25 லட்சம் ரூபாய்:'கிராஜுவிட்டி' எனப்படும் பணிக்கொடைக்கான உச்சவரம்பு, 10 லட்சம் ரூபாயிலிருந்து, 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. டி.ஏ., எனப்படும் அகவிலைப்படி, அடிப்படை சம்பளத்தைவிட, 50 சதவீதம் உயரும் போது பணிக்கொடைக்கான உச்ச வரம்பும், 25 சதவீதம் உயர்த்தப்படும்.

பணியின் போது உயிரிழக்கும் ராணுவம் மற்றும் மற்ற அரசு ஊழியர்களுக்கான இழப்பீட்டு தொகையும் உயர்த்தப்பட்டு உள்ளது. பணியின் போது விபத்து ஏற்பட்டு உயிரிழந்தாலோ, பயங்கரவாதிகள், சமூக விரோதிகளின் தாக்குதலில் உயிரிழந்தாலோ அளிக்கப்படும் இழப்பீட்டு தொகை, 10 லட்சம் ரூபாயிலிருந்து, 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

எல்லையில் நடக்கும் மோதல்கள், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் போது உயிரிழப்போர், இயற்கை சீற்றங்களால் உயிரிழப்போர் குடும்பத்துக்கான இழப்பீட்டு தொகை, 15 லட்சம் ரூபாயிலிருந்து, 35 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. போரின் போது உயிரிழப்போருக்கான இழப்பீட்டு தொகை, 20 லட்சம் ரூபாயிலிருந்து, 45 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மருத்துவ படிகள் உள்ளிட்ட சலுகைகள் குறித்து முடிவு செய்ய, பல்வேறு துறைகளின் செயலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு பரிந்துரை அளிக்கும் வரை, தற்போதுள்ள முறையே தொடரும்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.