Pages

Friday, July 29, 2016

அரசு பள்ளிகளில் ஆங்கில பிரிவு மாணவர்கள் ஆர்வம்:அமைச்சர் தகவல்

தமிழகத்தில் பள்ளிகள் எதுவும் மூடப்படவில்லை,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்தார்.சட்டசபையில் நடந்த விவாதம்:காங்கிரஸ் - கே.ஆர்.ராமசாமி: கிராமங்களில், ஆரம்ப பள்ளிகள் சரியாக செயல்படுவதில்லை. போதிய மாணவர்கள் இல்லாததால், பல பள்ளிகளை மூடும் நிலை ஏற்படுகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேருவது இல்லை. காரணத்தை அரசு சிந்தித்து பார்க்க வேண்டும்.


அமைச்சர் பெஞ்சமின்: தமிழகத்தில், 24 ஆயிரத்து, 103 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், 7,219 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 22.35 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். மேலும், ஒரு கிலோ மீட்டருக்கு, ஒரு தொடக்கப் பள்ளி அமைக்க வேண்டும். 3 கிலோ மீட்டர் துாரத்திற்கு, ஒரு நடுநிலைப் பள்ளி இருக்க வேண்டும் என்ற திட்டத்துடன், 5 ஆண்டுகளில், 221 தொடக்கப் பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளன.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், 107 நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. துாரத்தில் உள்ள பள்ளிக்கு சென்ற மாணவர்கள், அருகில் உள்ள பள்ளிக்கு மாறுவதால், சில பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைகிறது.அரசு பள்ளிகளில், ஆங்கிலப் பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இதில், அதிக மாணவர்கள் சேருகின்றனர். 2014 - 15ல், 1 லட்சம் மாணவர்கள், ஆங்கில வழிக்கல்வியில் சேர்ந்துள்ளனர்; எந்தப் பள்ளியும் மூடப்படவில்லை.
அமைச்சர் ஓ.எஸ்.மணியன்: தற்போது, பெற்றோர் தங்கள் குழந்தைகளை சேர்க்க அரசு பள்ளிகளை தேடி செல்கின்றனர்.

ராமசாமி: எனக்கு தெரிந்து, ஒரு பள்ளியில், ஆசிரியர் வருகிறார்; ஆனால் மாணவர் இல்லை.அமைச்சர் பன்னீர்செல்வம்: எந்த மாவட்டம், எந்த கிராமம் என்று குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.

ராமசாமி: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை ஒன்றியத்திற்கு உட்பட்ட, கீழ்குடி பள்ளியில் ஆசிரியர் இருக்கிறார்; மாணவர்கள் இல்லை.காரைக்குடி மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை. சி.டி., ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இல்லை. போதிய மருத்துவர்கள் இல்லை; கட்டடமும் இல்லை.

அமைச்சர் விஜயபாஸ்கர்: காரைக்குடி மருத்துவமனைக்கு, 2.26 கோடி ரூபாய் மதிப்பில், 50 படுக்கைகள் உடைய பொது வார்டு, மகப்பேறு வார்டு கட்டப்பட்டுள்ளது. மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்கேன் கருவிகள், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளுக்கு வாங்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக, மாவட்டத் தலைமை மருத்துவமனைகளுக்கு வாங்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.