Pages

Friday, July 29, 2016

கல்வி துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு!

தமிழகத்தில் தான் கல்வி துறைக்கு, அதிக நிதி ஒதுக்கப்படுகிறது, என, நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:

தி.மு.க., - சேகர்பாபு: பள்ளி கல்வித்துறையில், 600 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள், 60 காலியாக உள்ளன. இவை நிரப்பப்படாததால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டு உள்ளது. 

அமைச்சர் பெஞ்சமின்: ஒரே நாளில், 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி ஆணையை முதல்வர் வழங்கினார்.


அமைச்சர் வீரமணி: தி.மு.க., ஆட்சியில், 55 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. கடந்த, ஐந்து ஆண்டுகளில், 76 ஆயிரத்து, 314 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தொடக்கப் பள்ளியில், 25 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர்; நடுநிலைப் பள்ளிகளில், 24 பேருக்கு, ஒரு ஆசிரியர்; உயர்நிலைப் பள்ளிகளில், 26 பேருக்கு, ஒரு ஆசிரியர், மேல்நிலைப் பள்ளிகளில், 37 பேருக்கு, ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளனர். தலைமை ஆசிரியர் பணியிடங்கள், பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. முதல்வர் கவுன்சிலிங் தேதி அறிவித்துள்ளார்.

அமைச்சர் பன்னீர்செல்வம்: ஐந்து ஆண்டுகளாக, கல்வி துறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பள்ளி கல்வித்துறை, உயர்கல்வி துறை என, கல்வி துறைக்கு, 99 ஆயிரத்து, 184 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், எந்த மாநிலத்திலும், இவ்வளவு நிதி கல்விக்கு ஒதுக்கவில்லை. இதன் காரணமாக, தமிழகத்தில் மாணவர்கள் சேர்க்கை விகிதம், தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

சேகர்பாபு: அறநிலையத்துறை சார்பில், 36 பள்ளிகள், ஐந்து கல்லுாரிகள், ஒரு பாலிடெக்னிக் இயங்கி வருகின்றன.இங்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். போதிய ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்களின் கல்வி வளர்ச்சி, எட்டாக்கனியாக உள்ளது. சென்னை, கொளத்துார் ஜி.கே.எம்.பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

அமைச்சர் பெஞ்சமின்: இப்பள்ளி அருகே புதிதாக பல பள்ளிகள் துவக்கப்பட்டதாலும், பெற்றோர் இடம் மாறி சென்றதாலும், மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. மாணவர்களின் தேர்ச்சி விகிதம், 2010 - 11ம் ஆண்டு, 69 சதவீதமாக இருந்தது. 2015 தேர்ச்சி விகிதம், 80 சதவீதம்.இவ்வாறு விவாதம் நடந்தது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.