Pages

Monday, July 25, 2016

பழைய சமச்சீர் 'சிலபஸ்' மாற்ற புதிய குழு : அரசுக்கு தனியார் பள்ளிகள் ஆலோசனை

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றபடி, புதிய பாடங்கள் இடம் பெறும் வகையில், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்' என, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஆண்டுதோறும்...: தமிழகத்தில், 2011ல் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அமலானது. இந்த பாடத்திட்டம், 2008ல், உருவாக்கப்பட்டது; எட்டு ஆண்டுகள் பழமையானது. ஆனால், மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., மற்றும் இந்திய இடைநிலை கல்வி சான்றிதழ் கவுன்சிலான, ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டங்களில், ஆண்டுதோறும், புதுமை புகுத்தப்பட்டு, பாட வாரியமாக 'சிலபஸ்' மாற்றப்படுகிறது. அதனால், சி.பி.எஸ்.இ., அளவுக்கு, தமிழக மாணவர்கள் போட்டி போட முடியாமல் திணறுகின்றனர். இந்த பிரச்னை தொடர்பாக, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி பள்ளிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் சங்கத்தின் மாநில தலைவர் ஜே.பி.கிறிஸ்டோபர் மற்றும் மாநில செயலர் கலை விஜயகுமார் ஆகியோர் தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், தனியார் பள்ளிகளின் அங்கீகார பிரச்னை மற்றும் பாடத்திட்ட பிரச்னைகள் குறித்து விவாதித்தனர்.

இதுகுறித்து, சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமார் கூறியதாவது: சென்னையில் மக்கள் தொகை அதிகரித்து விட்ட நிலையில், பள்ளிகளுக்கு கட்டடங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை அமைக்க, போதிய இடவசதி இல்லை. பாதுகாப்பு விஷயங்களுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து விட்டு, நிலத்தின் அளவு குறித்த கட்டுப்பாட்டை நீக்க வேண்டும். இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு, அங்கீகாரம் வழங்கி, லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்கால அச்சத்தை போக்க வேண்டும்.

சமச்சீர் கல்வி பாடத்திட்டம் பழமையானது என்பதால், மற்ற பாடத்திட்ட மாணவர்களுடன், தமிழக மாணவர்கள் போட்டி போட திணறுகின்றனர். இதை போக்க, தமிழக அரசு புதிய குழு அமைத்து, புதிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

தீர்மானம் : கட்டாய கல்வி சட்டத்தில், 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான நிலுவைத் தொகையை விரைந்து வழங்கினால், நிதி பிரச்னையிலிருந்து பள்ளிகள் தப்பிக்கும். இதுகுறித்து பள்ளிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.